என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அருகே பாட்டியை கொலை செய்த பேத்தியை துப்பறியும் போலீஸ் நாய் கவ்வி பிடித்தது
    X

    சென்னிமலை அருகே பாட்டியை கொலை செய்த பேத்தியை துப்பறியும் போலீஸ் நாய் கவ்வி பிடித்தது

    சென்னிமலை அருகே பாட்டியை கொலை செய்த பேத்தியை துப்பறியும் போலீஸ் நாய் கவ்வி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
    ஈரோடு:

    சென்னிமலையை அடுத்த வடமுகம் வெள்ளோட்டில் உள்ள ஜல்லிமேடு தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் அம்மாசை. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகள் சந்திரா (வயது 23).

    சந்திராவுக்கும் ஆதாம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆன 3 மாதத்திலேயே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் சந்திரா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    தாய் முத்துலட்சுமிக்கும் மகள் சந்திராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. அப்போது கணவனுடன் வாழாமல் இங்கு வந்து எங்களுடனும் தகராறு செய்கிறாயே என்று முத்துலட்சுமி தனது மகளை கண்டித்து வந்தார்.

    சம்பவத்தன்றும் தாய்- மகள் இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது சந்திரா தாயிடம் கோபித்து கொண்டு அருகில் வசிக்கும் தனது பாட்டி பொன்னழகியின் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது பொன்னழகியும் பேத்தி சந்திராவை கண்டித்தார். கணவனுடன் வாழாமல் இங்கு வந்து ஏன் எல்லோரிடமும் சண்டை போடுகிறாய்? என்று கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரா தனது பாட்டியின் தலையை பிடித்து அங்கிருந்த கல்லில் மோதினார் . இதனால் பொன்னழகியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    அப்போதும் ஆத்திரம் அடங்காத சந்திரா அருகில் கிடந்த அரிவாளால் பொன்னழகியை வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் பொன்னழகி பாதாபமாக இறந்தார். இதனால் பயந்து போன சந்திரா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து நான் பாட்டியை கொலை செய்து விட்டேன். இதை யாரும் வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினாராம்.

    இந்த நிலையில் பொன்னழகி கொலை செய்யப்பட்ட போது சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் வந்து பார்த்தார். அப்போது பொன்னழகி ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் அவர் கொலை செய்யப்பட்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி வெள்ளோடு கிராம நிர்வாக அதிகாரி சுரேந்திர குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் இது குறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் துப்பறியும் நாய் வீரா வந்தது. இந்த நாய் கொலை செய்யப்பட்டு கிடந்த பொன்னழகியின் உடலை மோப்பம் பிடித்து ஓடியது. அருகில் உள்ள சந்திராவின் பெற்றோர் வீட்டுக்குள் நாய் ஓடியது.

    இந்த நேரத்தில் பாட்டி பொன்னழகியை கொலை செய்த போது சந்திராவின் உடையில் ரத்தம் கொட்டியது. இந்த துணிகளை அவர் மாற்றி கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த துப்பறியும் நாய் வீரா ரத்தக்கறை படிந்த சந்திராவின் துணியையும் அருகில் இருந்த சந்திராவையும் கவ்வி பிடித்தது.

    இதை தொடர்ந்து சந்திராவை கைது செய்த போலீசார் அவரிம் விசாரித்த போது அவர் பாட்டி பொன்னழகியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

    கைது செய்யப்பட்ட சந்திரா பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    கொலையாளியை போலீஸ் துப்பறியும் நாய் கவ்வி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
    Next Story
    ×