search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராவல்ஸ் அதிபர் மகன் கொலை: 4 வாலிபர்கள் கைது
    X

    டிராவல்ஸ் அதிபர் மகன் கொலை: 4 வாலிபர்கள் கைது

    டிராவல்ஸ் அதிபர் மகன் கொலையில் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    சேலம்:

    சென்னை, கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். டிராவல்ஸ் அதிபர். இவரது மகன் ஆசிஸ் இக்னோசியஸ் (வயது 25).

    சம்பவத்தன்று இவர் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு காரில் ஊர் ஊராக சுற்றி வந்தார். இதைத் தொடர்ந்து அவர் காரில் சேலத்திற்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து திருச்சி ரோட்டில் பழைய பஸ் நிலையத்தை நோக்கி காரில் வேகமாக சென்றார்.

    அப்போது கார் தாறு மாறாக ஓடி சாலையில் வந்தவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் பொதுமக்கள் காரை துரத்தி சென்று ஜவுளிக்கடை பஸ் நிறுத்தத்தில் வைத்து மடக்கி பிடித்தார்கள்.

    அப்போது ஆசிஸ் இக்னோசியஸ் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த ஆசிஸ் இக்னோசியஸ் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ம அடி கொடுத்த நபர்களை தேடி வந்தனர். இதில் 4 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள்.

    1. முத்தையன் (வயது 25)

    2.முத்து (22)

    3.சவுந்தர்ராஜன் (18)

    4.செந்தில்குமார் (20)

    இவர்கள் 4 பேரும் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    பின்னர் இவர்கள் 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது சம்பவத்தன்று ஆசிஸ் இக்னோசியஸ் போதையில் காரை ஓட்டிய போது, சாலையில் சென்ற பொதுமக்களை இடித்து தள்ளிவிட்டு காரை ஓட்டினார்.

    இதனால் அந்த காரை தடுத்து நிறுத்தி இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆசிஸ் இக்னோசியஸ் எங்களை தாக்க முயன்றார். இதனால் 4 பேரும் சேர்ந்து அவரை தாக்கினோம் என விசாணையின் போது போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து முத்தையன், முத்து ஆகிய இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சவுந்தர்ராஜன் சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும், செந்தில்குமார் ராசிபுரம் சீர்திருத்தப் பள்ளியிலும் போலீசார் அடைத்தனர்.
    Next Story
    ×