என் மலர்
செய்திகள்

ஆரணியில் புதுப்படத்தை படம் பிடித்து திருட்டு சி.டி. தயாரித்த சினிமா தியேட்டருக்கு சீல்: ஊழியர் கைது
ஆரணி:
ஆரணி சத்திய மூர்த்தி சாலையில் கிருஷ்ணா தியேட்டர் உள்ளது. இதன் உரிமையாளர் சக்தி. நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் அவரும், பாக்கியராஜ் மகன் சாந்தனுவும் நடித்த கோடிட்ட இடங்களை நிரப்புக படம் கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகையன்று வெளியானது.
ஆரணி கிருஷ்ணா தியேட்டரிலும் படம் வெளியிடப்பட்டது. படம் வெளியான அன்றைய நாள் இரவு காட்சியின் போது, திருட்டு சி.டி. தயாரித்து வெளியிடுவதற்கு தியேட்டர் ஆபரேட்டர் அறையில் இருந்து ஊழியர்களே கட்சிதமாக வீடியோ எடுத்துள்ளனர்.
இதனை படத்தை ஒளிபரப்பும் கியூப் டிஜிட்டல் நிறுவனம் கண்டுபிடித்தது. உடனடியாக அந்த நிறுவன ஊழியர்கள் படத்தை தயாரித்த பயாஸ் கோப் நிறுவனத்தாருக்கும், நடிகர் பார்த்திபனுக்கும் தகவல் கொடுத்தனர்.
பயாஸ் கோப் நிறுவன மேலாளர் கார்த்திக், திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். புகாரில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நடித்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் திருட்டு சி.டி. விற்பனைக்கு வந்துள்ளது.
திருட்டு சி.டி. ஆரணி கிருஷ்ணா தியேட்டரில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததாக கூறியிருந்தார். வேலூர் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையிலான குழு நேற்று தியேட்டருக்கு சென்றனர்.
அப்போது அங்கு பகல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. உடனடியாக காட்சி நிறுத்தப்பட்டது. ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர். தியேட்டரில் ஆய்வு செய்தபோது, திருட்டு சி.டி. எடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.
இதையடுத்து தியேட்டருக்கு சீல் வைத்தனர். ஊழியர் வெங்கடேசன் (வயது 55) மற்றும் உரிமையாளர் ஆகிய 2 பேர் மீதும் திருட்டு சி.டி. தயாரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு ஊழியர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தியேட்டரில் பயன்படுத்தப்பட்ட கியூப் டிஜிட்டல் கருவிகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். தப்பி ஓடிய தியேட்டர் உரிமையாளர் சக்தியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.