search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் மழை குறைந்ததால் தேங்காய் உற்பத்தி குறைந்தது
    X

    குமரியில் மழை குறைந்ததால் தேங்காய் உற்பத்தி குறைந்தது

    கடந்த ஒரு ஆண்டுகளாக மழை இல்லாததால் தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி பாதி அளவாக குறைந்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதால் கடந்த சில நாட்களாக தேங்காயின் விலை ஏறுமுகமாக உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. நெற்பயிர்கள் கருகி வருகிறது.

    நிலத்தடி நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் தண்ணீர் குறைந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. பாசன குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

    குமரி மாவட்டத்தில் நெற்பயிருக்கு அடுத்தப்படியாக விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பி உள்ளனர். தண்ணீரின்றி தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேங்காய் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.நெற்பயிர் மட்டுமின்றி தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடந்த ஒரு ஆண்டுகளாக மழை இல்லாததால் தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி பாதி அளவாக குறைந்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதால் கடந்த சில நாட்களாக தேங்காயின் விலை ஏறுமுகமாக உள்ளது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.16-க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.32 ஆக உயர்ந்துள்ளது. சில்லரை விலைக்கு கிலோ ரூ.35 வரை விற்கப்படுகிறது. மேலும் தேங்காய் விலை உயர வாய்ப்புள்ளது.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேங்காய்கள் வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தேங்காயின் ஏற்றுமதி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உற்பத்தி குறைவே இதற்கு காரணமாகும். எனவேதான் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. இன்னும் தேங்காய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

    Next Story
    ×