என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே லாரி மோதி 40 ஆடுகள் பலி
    X

    விருத்தாசலம் அருகே லாரி மோதி 40 ஆடுகள் பலி

    ஆந்திராவில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆட்டு மந்தைக்குள் புகுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி 40 ஆடுகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தன.
    ஸ்ரீமுஷ்ணம்:

    சிவகங்கை மாவட்டம் மேலசொரத்தூர் அருகே உள்ள மூலக்கரையை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது உறவினர் முருகேசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.

    இவர்கள் அந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து திட்டக்குடிக்கு கொண்டு செல்வதற்காக இன்று காலை விருத்தாசலம் வேட்டக்குடி அருகே ஆடுகளை ஓட்டி சென்றனர்.

    அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. இதில் ஆடுகள் அங்கும் இங்குமாக பயங்கர சத்தத்துடன் கலைந்து ஓடின. எனினும் லாரியின் சக்கரத்தில் சிக்கி 40 ஆடுகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தன. ஆடுகளை காப்பாற்றும் முயற்சியில் முருகேசன் ஈடுபட்டபோது லாரி அவர் மீதும் மோதியது.

    இதில் முருகேசன் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விருத்தாசலம் வருவாய்துறையினரும் விசாரணை நடத்திவருகின்றனர்.

    இந்த விபத்தால் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
    Next Story
    ×