search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுமானப்பணியின்போது கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து அண்ணன்- தம்பி பலி
    X

    கட்டுமானப்பணியின்போது கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து அண்ணன்- தம்பி பலி

    ராஜபாளையம் அருகே கட்டிட பணியின் போது கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் இடி பாடுகளுக்குள் சிக்கி அண்ணன்-தம்பி பலியானார்கள்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்த முத்துக்காளை என்பவர், வன்னியம்பட்டி செல்லும் சாலையில் நூற்பு ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையின் பின்புறம் உள்ள இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் 2-வது தளத்தின் மேல் கான்கிரீட் கூரை அமைக்கும் பணி நடந்து வந்தது. நேற்று நண்பகல் பலர் டீ குடிக்க கீழே சென்று விட்டனர். சிலர் மட்டும் மேற்கூரையில் நின்றும், இருவர் கூரைக்கு கீழே நின்றும் வேலை பார்த்து வந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் பகுதி பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. கீழே நின்று வேலை செய்து கொண்டிருந்த ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த செல்வம்(வயது28) மற்றும் அவரது தம்பி லிங்கம்(26) ஆகியோர் இதில் சிக்கிக்கொண்டனர். கான்கிரீட் சிமெண்ட் கலவை அவர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்து ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் பவுல்ஏசுதாஸ், ஜேசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்தனர். மேலே தளம் அமைத்துக் கொண்டிருந்த இருவர் லேசான காயத்துடன் தப்பினர். இருவரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

    உயிரிழந்த செல்வம் உடல் சிறிது நேரத்தில் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளின் மத்தியில் சிக்கிக் கொண்ட லிங்கத்தின் உடலை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு குழுவினர் மற்றும் ஆலை தொழிலாளர்கள் மீட்டனர். இருவரது உடலும் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கட்டிட மேற்பார்வையாளரான வன்னியம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உயிர் இழந்த அண்ணன் - தம்பி இருவரும் திருமணமானவர்கள். இருவருக்கும் குழந்தைகள் உள்ளனர். அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
    Next Story
    ×