search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் நடு ரோட்டில் காதல் ஜோடி கட்டிப்புரண்டு சண்டை
    X

    சேலத்தில் நடு ரோட்டில் காதல் ஜோடி கட்டிப்புரண்டு சண்டை

    சேலம் காந்தி ஸ்டேடியம் அருகில் நடு ரோட்டில் காதல் ஜோடி கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று காலை குடியரசு தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாணவி ஒருவர் வந்து இருந்தார்.

    இவர் விழா முடிந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு அவரது காதலன் வந்தார். பின்னர் இருவரும் காந்தி ஸ்டேடியம் அருகில் உள்ள ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மாணவி காதலனை தாக்கினார். இதை சற்றும் எதிர்பாராத காதலன், காதலியை அடித்தார். பின்னர் இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காதலர்களை விலக்கி சமாதானம் செய்தனர். பின்னர் இருவரும் தனித் தனியே நடந்து சென்றனர். பிறகு காதலன் ஓடிச்சென்று காதலியை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மாணவி தான் பையில் வைத்து இருந்த பிளேடை எடுத்து தனது கையை கிழித்து கொண்டார். இதனால் ரத்தம் கொட்டியது.

    இதை பார்த்து காதலன் அதிர்ச்சி அடைந்து ஏன் இப்படி செய்து கொள்கிறாய். வா ஆஸ்பத்திரிக்கு செல்வோம் என கூறி மாணவியின் கையை பிடித்து கெஞ்சினார். ஆனால் அந்த மாணவி கையை உதறி விட்டு கல்பனா தியேட்டர் பக்கம் நடந்து சென்றார். காதலனும் பின்னால் சென்று சமாதானம் செய்தார்.

    அப்போதும் மாணவி சமாதானம் ஆகவில்லை. அழுதபடி மீண்டும் காந்தி ஸ்டேடியம் நோக்கி வந்தார்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாணவி ரோட்டை சுற்றி சுற்றி வந்தார். இவர் பின்னால் காதலன் சமாதானம் செய்தபடி சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஏட்டு ஒருவர் காதலர்களை அழைத்து விசாரித்தார். காதலன், தான் சூரமங்கலத்தை சேர்ந்தவர் என்றும், மாணவியை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், காலையில் காதலியிடம் பேசவில்லை. அதனால் தன் மீது கோபத்தில் இருக்கிறார் என்றும், கோபத்தில் கையை பிளேடினால் கிழித்து கொண்டார். நான் ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்றால் வர மறுக்கிறார் என தெரிவித்தார்.

    பின்னர் ஏட்டு, அந்த மாணவியிடம் உன் பெற்றோர் செல்போன் நம்பரை கொடு, நான் அவர்களிடம் தெரிவிக்கிறேன் என கூறி
    கண்டித்தார்.

    இதில் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நாங்கள் எங்கள் பிரச்சினையை பார்த்து கொள்கிறோம் நீங்கள் செல்லுங்கள் என கூறினார். இதையடுத்து ஏட்டு காதலர்களை எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்றார்.

    இதன் பின்னர் காதலர்கள் காந்தி ஸ்டேடியம் பகுதியில் சுற்றி திரிந்து விட்டு வீட்டிற்கு சென்றனர். இவர்கள் செய்த தகராறை குடியரசு தின விழாவிற்கு வந்த பலரும் பார்த்து தலையில் அடித்தபடி சென்றனர்.
    Next Story
    ×