search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் 10 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம்-10 பவுன் கொள்ளை
    X

    திருச்சியில் 10 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம்-10 பவுன் கொள்ளை

    திருச்சியில் 10 ரூபாய் நோட்டுக்களை பறக்க விட்டு நூதன முறையில் பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 65), ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி ரேவதி (60). ரேவதி தனது தம்பியை பார்ப்பதற்காக காரில் கணவர் ரவியுடன் ஸ்ரீரங்கத்திற்கு சென்றிருந்தார். பின்னர் அவர்கள் உறவினர்களுடன் வயலூர் ரோடு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் ரேவதி தனியாக காரில் இருந்துள்ளார். மற்றவர்கள் பொருட்கள் வாங்க கடைக்குள் சென்று விட்டனர். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் 3 பேர் ரேவதி அமர்ந்திருந்த காரின் அருகே ரூ.10 நோட்டுக்களை போட்டுள்ளனர்.  பின்னர்  அவர்கள் ரேவதியிடம் இது உங்கள் பணமா?  எனக்கேட்டனர். காரை விட்டு கீழே இறங்கிய ரேவதி பணத்தை  எடுக்க முயற்சி  செய்தார். 

    இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் 3 பேர் காரில் இருந்த ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும் 10 பவுன் தங்கநகையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதனால்  அதிர்ச்சியடைந்த ரேவதி இதுகுறித்து கணவர் ரவிக்கு தெரிவித்தார்.  பின்னர்  அவர்கள் திருச்சி  அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார்  செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணம், நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருச்சியில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×