என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் உயிரியல் பூங்கா பொங்கல் பண்டிகைக்கு திறக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    வண்டலூர் உயிரியல் பூங்கா பொங்கல் பண்டிகைக்கு திறக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    ‘வார்தா’ புயலால் சேதம் அடைந்த வண்டலூர் உயிரியல் பூங்கா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பார்வையாளர்கள் பார்வையிட திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ‘வார்தா’ புயலால் பலத்த சேதம் அடைந்தது. பூங்காவில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து, விலங்குகள் இருப்பிடம் மற்றும் பார்வையாளர்கள் செல்லும் பகுதியில் விழுந்து விட்டன.

    பூங்காவை தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு விழுந்த மரங்களை விரைவாக அகற்றும்படி உத்தரவிட்டார். மேலும் பூங்காவை சீரமைக்க தமிழக அரசின் சார்பில் முதல் கட்டமாக ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    அதன் பிறகு மரங்களை எந்திரம் மூலம் வெட்டி அகற்ற பயிற்சி பெற்ற நபர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் கட்டமாக பூங்காவில் பார்வையாளர்கள் நடந்து செல்லும் பகுதியில் விழுந்து கிடந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

    அதன் பின்னர் தமிழகம் வந்த மத்திய குழுவினர், பூங்காவை நேரில் ஆய்வு செய்தனர். அவர்களிடம் பூங்கா அதிகாரிகள், பூங்காவை சீரமைக்க ரூ.24 கோடி தேவைப்படுகிறது என்று கோரிக்கை மனு அளித்தனர். மத்திய குழுவினர் வந்து சென்ற பிறகு பூங்காவை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர்.

    பூங்காவில் விழுந்து கிடந்த தைலம் மரங்களை மட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தினர் வெட்டி எடுத்துச்சென்றனர். மீதம் உள்ள மரங்கள் வெட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வெட்டப்பட்ட மரத்துண்டுகள் பூங்காவின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

    மரம் விழுந்து பாதிப்பு அடைந்த விலங்குகள் இருப்பிடங்களை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. பார்வையாளர்கள் பூங்காவை சுற்றி பார்க்க வைத்திருந்த சைக்கிள்கள் புயலால் சேதம் அடைந்தன. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் வெட்டப்பட்ட மரக்கழிவுகள் பூங்காவில் பார்வையாளர்கள் நடந்து செல்லும் சாலை ஓரம் மற்றும் விலங்குகள் இருப்பிடங்கள் அருகில் புதர்கள் போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனையும் பூங்கா அதிகாரிகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தீ விபத்து ஏற்பட்டால் பூங்கா முழுவதும் தீ பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பார்வையாளர்கள் பார்வையிட பூங்கா திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    இது குறித்து பூங்கா அதிகாரி கூறியதாவது:-

    ‘வார்தா’ புயலில் வண்டலூர் பூங்கா பலத்த சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காவுக்கு வருடந்தோறும் 3 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள். ஆகையால் பூங்காவை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறக்க பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள், பூங்காவை சுற்றிப்பார்த்தனர். அப்போது வெட்டப்பட்ட மரங்களின் கழிவுகள் பூங்காவில் பல்வேறு பகுதியில் அப்படியே கிடக்கிறது. இந்த நிலையில் பூங்காவை பார்வையாளர்கள் பார்க்க திறந்தால் ஆபத்து ஏற்படும். யாராவது விளையாட்டுக்கு மரக்கழிவுகளில் தீ வைத்துவிட்டால் பயங்கர தீ விபத்து ஏற்படும். அப்போது 1,480 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்கா முழுவதும் தீ பரவும், தீயை அணைப்பதற்கு போதிய தீயணைப்பு வாகனங்கள் நம்மிடம் கிடையாது.

    இதனால் பூங்காவில் உள்ள மரக்கழிவுகளை முழுமையாக அகற்றிவிட்டு பூங்காவை திறக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் திட்டவட்டமாக பூங்கா அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டனர். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காவை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு பூங்கா அதிகாரி கூறினார்.

    இந்த நிலையில் பூங்காவை பார்க்க தினமும் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் பூங்காவை பார்க்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

    இதையடுத்து பூங்கா சார்பில், நுழைவு வாயில் பகுதியில் ஒரு பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அதில், ‘வார்தா’ புயல் சேதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பூங்காவின் உள்ளே பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று எழுதப்பட்டு உள்ளது.
    Next Story
    ×