என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 2½ வயது குழந்தை கொலை
    X

    தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 2½ வயது குழந்தை கொலை

    கடலூரில், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 2½ வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 38). இவர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் நூடுல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய முதல் மனைவி ஆஷா. இவர்களுக்கு 2½ வயதில் ஹாத்திபா என்கிற பெண் குழந்தை இருந்தது.

    கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆஷா, கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஹாத்திபா தந்தையுடன் வசித்து வந்தாள்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முகமது அலி, ஷகிலாபானு என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த 3-ந் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஹாத்திபா திடீரென மாயமானாள். பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இது பற்றிய புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசில் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டு குடிநீர் குழாயில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உரிமையாளர் குணசேகரன் என்பவர் மொட்டை மாடியில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எலி ஏதாவது செத்து கிடக்கிறதா? என்று பார்த்தார்.

    அப்போது ஹாத்திபா தண்ணீரில் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி முகமது அலியிடம் தெரிவித்தார்.

    இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தண்ணீர் தொட்டி மாடி தளத்தில் இருந்து 6 அடி உயரத்தில் உள்ளதால் குழந்தை தானாக ஏறி விழுந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    பின்பு போலீசார், ஹாத்திபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், ஹாத்திபாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக முகமது அலி, ஷகிலாபானு, மற்றொரு வாலிபர் ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×