search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான டென்னீஸ் நமேகா பீட்டர்சன்
    X
    கைதான டென்னீஸ் நமேகா பீட்டர்சன்

    ரூ.16 லட்சம் மோசடி: கிருஷ்ணகிரியில் கைதான நைஜீரிய வாலிபர் புழல் சிறையில் அடைப்பு

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்த வாலிபர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள எம்.சி.பள்ளி பக்கமுள்ள மாட்டு ஓணி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 39). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க ஆசைப்பட்ட மோகன்ராஜ் இதற்காக இணையதளம் மூலமாக பல்வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தார்.

    இந்த நிலையில் இணையதளத்தில் இருந்து மோகன்ராஜின் விவரங்களை சேகரித்த நைஜீரியா நாட்டை சேர்ந்த சிலர் வேலை வாங்கி தருவதாக மோகன்ராஜை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டனர். மேலும் வெளிநாட்டிற்கு விமானத்தில் வரும் செலவு தவிர மற்ற அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறி சில வங்கிகளின் கணக்குகளை மோகன்ராஜிக்கு அனுப்பி வைத்தனர். அதை நம்பி மோகன்ராஜூம் ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை அந்த கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக நைஜீரியாவை சேர்ந்தவர்கள் மோகன்ராஜை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டு வந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மோகன்ராஜ் இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள வெளிநாடுகளில் வேலை வாங்கி தரக்கூடிய சில முகவர்களை தொடர்பு கொண்டு கேட்டார்.

    அந்த நேரம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாரிடம் புகார் செய்தார். இதையடுத்து அது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் நைஜீரியாவை சேர்ந்த சிலர் மோகன்ராஜை தொடர்பு கொண்டு வங்கி கணக்கில் பணம் போட வேண்டும் என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் பேசிய மோகன்ராஜ், தற்போதுள்ள சூழ்நிலையில் தன்னால் வங்கியில் பணம் செலுத்த முடியாது. எனவே நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். இதையடுத்து டெல்லியில் உள்ள தனது நண்பரை அனுப்பி வைப்பதாக நைஜீரியாவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மோகன்ராஜிடம் பணம் பெறுவதற்காக ஒருவர் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் வந்தார். அவரை கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் டென்னீஸ் நமேகா பீட்டர்சன் (34) நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மோகன்ராஜிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

    விசாரணையில் இந்த மோசடியில் நைஜீரியா நாட்டில் உள்ள தனது நண்பர்கள் ஜான்சிர்ப், பீட்டர்வில்லியம் மற்றும் மால்க்ஹாரி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். மால்க்ஹாரி இணையதளத்தில் இருந்து வேலை தேடுபவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை தொடர்பு கொண்டு மோசடி செய்வதாக தெரிவித்தார்.

    இதையடுத்து டென்னீஸ் நமேகா பீட்டர்சனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் சுற்றியதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×