search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் பிடிபட்ட 4 போலி டாக்டர்கள் ஜெயிலில் அடைப்பு
    X

    ஆரணியில் பிடிபட்ட 4 போலி டாக்டர்கள் ஜெயிலில் அடைப்பு

    ஆரணி பகுதியில் கைது செய்யப்பட்ட 4 போலி டாக்டர்களும் விசாரணைக்கு பிறகு ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் மருத்துவப்பணிகள் இணைஇயக்குனர் டாக்டர் கிரிஜா தலைமையில் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆரணி அருகே உள்ள குண்ணத்தூர் கிராமத்தில் தேவக்குமார் (வயது 50) என்பவரும், அதே பகுதியில் ரவி (50) என்பவரும் எம்.பி.பி.எஸ்.படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருவதாக பொதுமக்களிடத்தில் இருந்து புகார்கள் வந்தது.

    அதைத்தொடர்ந்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கிரிஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர்கள் இருவரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா வழக்குப்பதிவு செய்து தேவக்குமார், ரவி ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் தேவக்குமார் பி.எஸ்சி மட்டுமே படித்துள்ளார்.

    இதேபோல் களம்பூர் பேரூராட்சி பகுதியில் ஆரணி-போளூர் நெடுஞ்சாலையில் கிளினிக் நடத்தி வந்த போளூர் சிவராஜ் தெருவை சேர்ந்த பரமேஷ் (28) என்பவரும், ஆரணி என்.எஸ்.தெருவை சேர்ந்த சந்தோஷ் (28) என்பவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அல்லிராணி ஆகியோர் கைது செய்தனர்.

    ஆரணி பகுதியில் ஒரே நாளில் 4 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பல போலி டாக்டர்கள் தலைமறைவாகிவிட்டனர். பிடிபட்ட 4 போலி டாக்டர்களும் விசாரணைக்கு பிறகு ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×