search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெற்றோர் தூங்கியதால் பஸ் படிகட்டு வழியாக ஊர்ந்து சென்று ரோட்டில் தவறி விழுந்த 1 வயது குழந்தை
    X

    பெற்றோர் தூங்கியதால் பஸ் படிகட்டு வழியாக ஊர்ந்து சென்று ரோட்டில் தவறி விழுந்த 1 வயது குழந்தை

    சேலம் அருகே பெற்றோர் தூங்கியதால் பஸ் படிகட்டு வழியாக ஊர்ந்து சென்று ரோட்டில் தவறி விழுந்த 1 வயது குழந்தை உயிர் தப்பியது.

    மகுடஞ்சாவடி:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியைச்சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி மாலினி. இவர்களுக்கு 1 வயதில் மீன ரோஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.

    ஏழுமலை குடும்பத்துடன் திருப்பூரில் வாடகை வீடு எடுத்து அங்குள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மாலினியும் அங்குள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இருவரும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி நேற்று இரவு குழந்தையுடன் திருப்பூரில் இருந்து சேலம் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பஸ் இருக்கையில் அமர்ந்தபடி மாலினி தனது மகள் மீன ரோஷினியை மடியில் வைத்திருந்தார். பின்னர் நேரம் ஆக ஆக மாலினிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டது.மகளை மடியில் வைத்த படியே சிறிது நேரத்தில் இருக்கையில் அமர்ந்தவாறு தூங்கி விட்டார். சற்று நேரத்தில் தந்தை ஏழுமலையும் அயர்ந்து தூங்கி விட்டார்.

    ஏதும் அறியாத பச்சிளம் குழந்தை மீனரோஷினி தாயின் மடியில் இருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கி வந்து பஸ்சுக்குள் ஊர்ந்து சென்றபடி அங்கும் இங்குமாக விளையாடியது. விடிந்த பிறகும் 2 பேரும் எழுந்திருக்கவில்லை. தூங்கி கொண்டிருந்தனர்.

    காலை 7 மணி அளவில் மகுடஞ்சாவடி அருகே உள்ள கனககிரி என்ற இடத்தில் வந்தபோது பஸ்சுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று படிக்கட்டு வழியாக இறங்கி சாலையில் தவறி விழுந்தது.

    இதனை பஸ்சில் இருந்த கண்டக்டர், டிரைவர், மற்ற பயணிகள் என யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது. குழந்தை தவறி விழுந்ததை யாராவது பார்த்து இருந்தால் டிரைவர் உடனே பஸ் நிறுத்தி இருப்பார். யாரும் இதனை பார்க்காததால் பஸ் நேராக சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இதற்கிடையே பஸ்சில் இருந்து தவறி விழுந்த குழந்தை மீனா ரோஷினிக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் இருந்த பயணிகள் ரோட்டில் குழந்தை இருப்பதை கண்டதும் கூச்சல் போட்டு உடனே பஸ்சை நிறுத்தினார்கள்.

    இதையடுத்து பயணிகள் கீழே இறங்கி சென்று அந்த குழந்தையை கையில் தூக்கி எடுத்து சாலையோரத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் ஓப்படைத்தனர்.

    பொதுமக்கள், இக் குழந்தை பெண் குழந்தை என்பதால் யாரோ சாலையில் போட்டு விட்டு சென்றதாக நினைத்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் பஸ் சேலம் புதிய பஸ் நிலையத்தை சென்றடைந்ததும் பெற்றோர் கண்விழித்து பார்த்தபோது மடியில் இருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அழுதவாறு பஸ் முழுவதும் தேடி பார்த்தார்கள்.

    பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் கண்டக்டர், டிரைவர் உள்ளிட்ட அனைவரிடமும் குழந்தையை பற்றி கேட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என தெரிவித்து விட்டனர்.

    இதையடுத்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதுபற்றி சங்ககிரி போலீசார் விசாரித்தபோது மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் குழந்தை இருப்பது தெரியவந்தது.

    உடனே பெற்றோர் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு சென்று குழந்தை பெற்று கொண்டு கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×