search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்தது

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலையில் விநாடிக்கு 97 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 86 கன அடியாக குறைந்தது.

    இன்று காலையில் நீர்வரத்து மேலும் குறைந்து விநாடிக்கு 44 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்துக்காக அணையில் இருந்து விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நீர் திறப்பை விட, நீர் வரத்து பல மடங்கு குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 40.99 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 40.85 அடியாக குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் சற்று சரிந்து 40.73 அடியாக உள்ளது.

    இதனால் வறண்டு வரும் நீர்ப்பரப்பில் விவசாயிகள் நடவு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். எள், சோளம், கம்பு, ராகி, வரகு, தினை, நிலக்கடலை, தர்ப்பூசணி, மிளகாய் போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை கை கொடுக்காததால் தேவூர் அருகே கோனேரிப்பட்டி காவிரி ஆறு வறண்டு தண்ணீரின்றி பாறை திட்டுக்களாக காணப்படுகிறது.

    Next Story
    ×