என் மலர்
செய்திகள்

வேலூரில் காதல் திருமணம் செய்த வாலிபருக்கு அடி, உதை: பெண் வீட்டார் தாக்குதல்
வேலூர்:
வேலூர் சலவன்பேட்டை சேஷாத்திரி முதலியார் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் செந்தில்குமார் (வயது 27). முடி திருத்தும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் அனுப்பிரியா (21). பி.ஏ. பட்டதாரி. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனுப்பிரியா வீட்டு தரப்பில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, எதிர்ப்பை மீறி செந்தில்குமாரும், அனுப்பிரியாவும் ரகசியமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி, இன்று காலையில் யாருக்கும் தெரியாமல் அனுப்பிரியாவை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற செந்தில்குமார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வைத்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
பிறகு, வேலப்பாடியில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக காதல் ஜோடி புறப்பட்டு சென்றனர். இதையறிந்த பெண் வீட்டார், வேலப்பாடியில் குவிந்தனர். காதல் ஜோடியை கண்டதும் சூழ்ந்துக் கொண்டனர்.
அனுப்பிரியாவை தங்களது பக்கம் இழுத்துக் கொண்ட பெண் வீட்டு கும்பல், செந்தில்குமாரை சரமாரியாக தாக்கி அடித்து, உதைத்தனர். தாக்கிய கும்பலிடம் இருந்து காதல் ஜோடி தப்பினர். வேலூர் அண்ணாசாலையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஓடி வந்து தஞ்சமடைந்தனர்.
போலீசாரிடம் நடந்ததை கூறினர். இதையடுத்து காதல் ஜோடியை, அருகே உள்ள வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு மகளிர் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
நாங்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். வெவ்வேறு சமூகம் என்பதால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால் எங்களை தாக்குகிறார்கள் என்று கூறினர்.
காதல் ஜோடி போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்த அடுத்த சில நொடிகளில் பெண் வீட்டாரும் வந்தனர். போலீசார் இருத்தரப்பையும் சமரசம் செய்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.