search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் குரங்கை சித்ரவதை செய்து கொன்ற 4 மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்டு
    X

    வேலூரில் குரங்கை சித்ரவதை செய்து கொன்ற 4 மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்டு

    குரங்கை கட்டி வைத்து சித்ரவதை செய்து கொன்றதாக வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் வெவ்வேறு ஆண்டுகள் படித்து வரும் மாணவர்கள் ஜஸ்பர் சாமுவேல் சாகு, ரோகித்குமார் ஏனுகொட்டி, அருண்லூயி சசிகுமார், அலெக்ஸ் செக்கலயில் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர்.

    கடந்த 19-ந் தேதி (சனிக்கிழமை) இவர்கள் தங்கியிருந்த விடுதி அருகே பெண் குரங்கு ஒன்று வந்தது. 4 மாணவர்களும் அந்த குரங்கை பிடித்து தொலைபேசி வயரால் கட்டி வைத்தனர். பிறகு குரங்கின் தொடை, கழுத்து, கணுக்காலை உடைத்தும், கத்தியால் குத்தியும் கொன்றனர். பின்னர் விடுதி வளாகத்திலேயே புதைத்தனர்.

    இந்த விவகாரம் சி.எம்.சி. கல்லூரியில் படித்து வரும் மருத்துவ மாணவி ஒருவர் மூலம் விலங்குகள் நல ஆர்வலரான திருவண்ணா மலை வால்மீகி நகரை சேர்ந்த சிலவன் கிருஷ்ணன் (வயது 30) என்பவர் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

    இதுகுறித்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் விலங்குகள் நல ஆர்வலர் புகார் அளித்தார். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் புதைக்கப்பட்ட குரங்கின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. வேலூர் கால்நடை மருத்துவ மனையில் குரங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனையில் குரங்கு சித்ரவதை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் 4 பேர் மீதும் பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் இன்று அல்லது நாளைக்குள் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மாணவர்கள் 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. உடனடியாக கல்லூரி வளாகத்தை விட்டு 4 மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

    கொடூரமான முறையில் குரங்கை கொலை செய்த மாணவர்கள் 4 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களில் வரும் காலங்களில் மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து நாய் ஒன்றை தூக்கி கீழே வீசினர். நாயின் கால்கள் உடைந்தது. இச்சம்பவத்தை அந்த மாணவர்கள் போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பரவ விட்டனர்.

    இதை பார்த்த விலங்கின ஆர்வலர் ஒருவர் விரைந்து சென்று பலத்த காயமடைந்த நாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தார். மேலும் இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். போலீசார் விலங்குகள் பாதுகாப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 மாணவர்களையும் கைது செய்தனர்.

    இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த மாணவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. இதேபோன்று வேலூரில் குரங்கை சித்ரவதை செய்து கொன்ற சம்பவத்திலும் 4 மருத்துவ மாணவர்கள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குரங்கை கொன்றது தொடர்பாக மருத்துவ மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வனத்துறை சார்பிலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    அதன்படி, 4 மருத்துவ மாணவர்களுக்கும் 3 ஆண்டு ஜெயில், ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×