search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி பகுதியில் நெல் நாற்று நடவும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
    X
    கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி பகுதியில் நெல் நாற்று நடவும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

    குமரியில் 2-வது நாளாக பரவலாக மழை: கும்ப பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

    கன்னியாகுமரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கும்ப பூ சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்கிறது.

    நேற்று அதிகாலை 3 மணிக்கு மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பின்னர் சாரல் மழையாக பெய்தது. குலசேகரம், மார்த்தாண்டம், திருவட்டார், திற்பரப்பு, அருமனை போன்ற பகுதிகளில் பகலில் சாரல் மழை பெய்தது. மதியத்துக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இன்று காலை முதல் குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது. நாகர்கோவில், கன்னியாகுமரி, பூதப்பாண்டி, மார்த்தாண்டம், குலசேகரம், கொட்டாரம் போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

    இதனால் காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். அவர்கள் குடைபிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் பள்ளிக்கு சென்றனர். இதேபோல அலுவலக பணிக்கு செல்வோரும் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொட்டாரத்தில் அதிகபட்சமாக 9.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. மயிலாடியில் 7.2 மி.மீட்டர் மழையும், குளச்சலில் 3.6, அடையாமடையில் 3.2 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

    மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதேபோல குளங்களிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    திற்பரப்பு அருவியில் குறைந்தளவே தண்ணீர் விழுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து குளியலிட்டு வருகிறார்கள்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கும்ப பூ சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தற்போது கொட்டாரம், பூதப்பாண்டி, சுசீந்திரம் போன்ற பகுதிகளில் நாற்று நடவும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    Next Story
    ×