என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதி தீ பிடித்தது: 2 பேர் பலி
    X

    விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதி தீ பிடித்தது: 2 பேர் பலி

    விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதி தீ பிடித்ததில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து வேப்பூருக்கு நேற்று இரவு கார் புறப்பட்டது. காரில் 2 பேர் இருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் கார் விருத்தாசலம் அருகே விளாங்காட்டூர் பகுதியில் வந்துகொண்டிருந்தது.

    திடீரென்று கார் நிலைதடுமாறி தாறு மாறாக ஓடி சாலையோர மரத்தில் மோதியது.

    மரத்தில் மோதிய வேகத்தில் காரில் தீப்பிடித் தது. சிறிது நேரத்தில் அந்த தீ கார் முழுவதும் பரவியது. காரில் இருந்தவர்கள் காரை திறந்து வெளியே வர முயன்றனர். அவர் களால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் உடலில் தீப்பற்றியது.

    சிறிது நேரத்தில் காரில் இருந்த 2 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்ற சிலர் கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். ½ மணி நேரம் போராடி காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். தீ பற்றி எரிந்ததால் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    தீயில் கருகி பிணமான 2 பேரின் உடல்களும் எலும்புகூடுகளாக காட்சி அளித்தன.

    சம்பவ இடத்துக்கு விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்தனர். காருக்குள் கரிக்கட்டையாக கிடந்த 2 பேரின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீயில் கருகி இறந்த 2 பேரும் யார்? அவர்களுக்கு எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

    போலீசாரின் தொடர் விசாரணையில் விபத்தில் சிக்கிய கார் சென்னை அண்ணாநகர் வ.உ.சி.நகர் கிழக்கு நியூகாலனி முதலாவது தெருவைச் சேர்ந்த ஆண்டியாப்பிள்ளை மகன் முத்துவேலுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. காரின் எண். டி.என்.04.ஏ.பி.7837 ஆகும்.

    இதையொட்டி சென்னையில் உள்ள முத்துவேலு குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பிறகுதான் காரில் பயணம் செய்தவர்கள் யார் என்பது தெரியவரும்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×