search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லை வந்தது: நாளை பூண்டி ஏரிக்கு வந்து சேரும்
    X

    கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லை வந்தது: நாளை பூண்டி ஏரிக்கு வந்து சேரும்

    கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டுக்கு வந்து சேர்ந்தது. தமிழக எல்லை வந்தது. நாளை பூண்டி ஏரிக்கு வந்து சேரும்.
    ஊத்துக்கோட்டை:

    கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் இன்று காலை தமிழக எல்லையை வந்தடைந்தது.

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக ஆந்திர அரசுகள் 1983-ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டதை உருவாக்கினர்.

    இந்த திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டிஎம்சி தண்ணீரை கண்ட லேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியாக மொத் தம் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

    பூண்டி ஏரியின் நீர் மட்டம் தற்போது வெகுவாக குறைந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் அம்மாநில முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டார்.

    அதன் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு வெறும் 200 கனஅடிவீதம்தான் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு அதிகப்படுத்தும்படி தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் கூடுதலாக 300 கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர்.

    இதனால் வினாடிக்கு 500 கனஅடி விதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டுக்கு வந்து சேர்ந்தது.

    அமைச்சர் பெஞ்சமின், கலெக்டர் சுந்தரவல்லி. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசராவ். உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர் மலர் தூவி கிருஷ்ணா நதி நீரை வரவேற்றனர்.

    இந்த தண்ணீர் நாளை பூண்டி ஏரிக்கு வந்தடையும் வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரி உயரம் 35 அடி. அதாவது 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 17.79 அடியாக பதிவானது. வெறும் 89 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு 39 கனஅடி தண்ணீர். பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 25 கனஅடியாக மொத்தம் 64 கனஅடிவிதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    Next Story
    ×