search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.9½ லட்சம் கொள்ளை: கூரியர் நிறுவன மேலாளர்- 2 ஊழியர்கள் கைது
    X

    ரூ.9½ லட்சம் கொள்ளை: கூரியர் நிறுவன மேலாளர்- 2 ஊழியர்கள் கைது

    கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள கூரியர் நிறுவனத்தில் ரூ.9½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கூரியர் நிறுவன மேலாளர் மற்றும் 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை சுங்கம் பை பாஸ் ரோட்டில் உள்ள கூரியர் நிறுவனத்தில் கடந்த 13-ந் தேதி இரவு முகமூடி அணிந்த 2 பேர் வந்தனர். அங்கு இருந்த மேலாளர் நிசாரை (வயது 30) மிரட்டி வசூல் பணம் ரூ.9½ லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் லட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவாகி இருந்த விரல் ரேகைகளை பதிவு செய்து அவற்றை பழைய குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

    மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 18 ஊழியர்களிடமும் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். அத்துடன் அந்த நிறுவனத்துக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

    அப்போது இதே நிறுவனத்தின் பொள்ளாச்சி கிளையில் மேலாளராக பணியாற்றி வரும் ராமச்சந்திரன் (45) என்பவர் அடிக்கடி கோவைக்கு வந்து செல்வது தெரிய வந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் ரூ.9½ லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொள்ளையில் ராமச்சந்திரன் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார்.

    மேலும் கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றும் ஊழியர்கள் அம்ஜத், அரவிந்த் ஆகிய 2 பேரும் பணத்தை கொள்ளையடித்தவர்கள் என தெரிய வந்தது.

    இதைதொடர்ந்து மேலாளர் ராமச்சந்திரன், மற்றும் ஊழியர்கள் அம்ஜத், அரவிந்த் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9½ லட்சம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×