என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு மீண்டும் பஸ்-லாரிகள் இன்று முதல் ஓடியது
    X

    சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு மீண்டும் பஸ்-லாரிகள் இன்று முதல் ஓடியது

    கர்நாடகாவுக்கு 30 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து பஸ்கள்-லாரிகள் இன்று காலை 10 மணி முதல் இயக்கப்பட்டன. அதே போல கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பஸ்கள்-லாரிகள் தமிழகத்துக்கு வந்து சென்றன.
    ஈரோடு:

    காவிரி பிரச்சினை யொட்டி தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு சென்ற பஸ்கள்-லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதுடன் கர்நாடகாவில் உள்ள தமிழர்களும் தாக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள்-லாரிகள் நிறுத்தப்பட்டன. ஈரோட்டில் இருந்து சரக்குகளை ஏற்றி சென்ற 10 லாரிகளுக்கு கர்நாடகாவில் வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

    இருப்பினும் கர்நாடகாவில் இருந்து லாரிகள்-பஸ்கள் வழக்கம் போல தமிழகத்துக்கு வந்து சென்றன. இந்த நிலையில் ஈரோடு லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் தமிழகத்திலும் கர்நாடக மாநில லாரிகள் தாக்கப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் ஈரோடு, அந்தியூர், பவானி போன்ற பல்வேறு பகுதிகளில் கர்நாடக லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டன. இது போன்ற சம்பவங்களினால் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழகத்துக்கு வரும் லாரிகள்-பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

    கர்நாடகத்துக்கு பஸ்கள் ஓடாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கர்நாடகத்துக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளும், கர்நாடகம் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும் ஓடாததால் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்தன.

    இதன் காரணமாக லாரி டிரைவர்களும், கிளீனர்களும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் போதிய வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் மைசூரில் இருந்து நேற்று கோவைக்கு சத்திய மங்கலம் வழியாக கர்நாடக பஸ் புறப்பட்டு வந்தது.

    இந்த பஸ் தமிழக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வந்தபோது தமிழக போலீசார் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தினர். இந்த பஸ்சை திம்பம் வரை மட்டுமே இயக்க போலீசார் அனுமதித்தனர். இதன் காரணமாக திம்பம் வரை சென்ற கர்நாடக பஸ் அங்கு பயணிகளை இறக்கி விட்டு திரும்பி சென்றது.

    இதற்கிடையே கர்நாடகாவில் இப்போது சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் கர்நாடகா-தமிழக பஸ்கள் மற்றும் லாரிகளை இன்று முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆசனூரில் முகாமிட்டு கர்நாடக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார். இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இரு மாநில வாகனங்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதன் காரணமாக 30 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து பஸ்கள்-லாரிகள் இன்று காலை 10 மணி முதல் இயக்கப்பட்டன. அதே போல கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பஸ்கள்-லாரிகள் தமிழகத்துக்கு வந்து சென்றன.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இன்று முதல் லாரிகள் ஓடிய தால் வேலை இல்லாமல் தவித்த டிரைவர்கள்-கிளீனர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சந்தோ‌ஷத்தில் மிதந்தனர்.
    Next Story
    ×