search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து முன்னணி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: திண்டுக்கல்லில் 13 பஸ்கள் உடைப்பு-பதட்டம்
    X

    இந்து முன்னணி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: திண்டுக்கல்லில் 13 பஸ்கள் உடைப்பு-பதட்டம்

    திண்டுக்கல்லில் இந்து முன்னணி பிரமுகரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்து பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கிலி. இவருடைய மகன் சங்கர் கணேஷ் (30). இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

    நேற்று இரவு 10 மணி அளவில் சங்கர் கணேஷ் திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் தலைமை தபால் அலுவலகம் அருகே தனது நண்பர் சரவணனின் கடைக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கே மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் சங்கர் கணேசை கீழே தள்ளி சரமாரியாக வெட்டினர்.

    இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் அவருக்கு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. பொதுமக்கள் ஒன்று கூடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் உயிருக்கு போராடிய சங்கர் கணேசை அங்கிருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    சங்கர் கணேஷ் வெட்டப்பட்ட சம்பவம் அறிந்ததும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவு 12 மணியளவில் அரசு ஆஸ்பத்திரி அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த பஸ்கள் மீதும் கல் வீசி தாக்கினர்.

    இது தவிர திண்டுக்கல் பஸ் நிலையம், நாகல்நகர், பழனிசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வந்த பஸ்கள் கல் வீசி தாக்கப்பட்டன. இதனால் அதிர்சியடைந்த பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். கல் வீச்சில் பஸ் டிரைவர் உட்பட பயணிகள் சிலர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் 13 பஸ்கள் சேதமடைந்தன. சம்பவம் குறித்து அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் துணை சூப்பிரண்டு சிகாமணி மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதனால் நகரின் முக்கிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இன்று காலை பஸ்நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. அதிகாலையில் திறக்கப்பட்ட கடைகளை மூடச்1 சொல்லி இந்து அமைப்பினர் சிலர் மிரட்டியதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடைகளை மூடி இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் திண்டுக்கல் நகரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    Next Story
    ×