search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.-வுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளத் தயார் - ஜி.கே.வாசன்
    X

    தி.மு.க.-வுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளத் தயார் - ஜி.கே.வாசன்

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-வுடன் த.மா.கா கூட்டணி வைக்கும் சூழ்நிலை உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி அமைக்கும் என்று கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டது.

    இதனை உறுதி செய்வதுபோல த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று காலை 11.30 மணியளவில் சென்றார்.

    அவரை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஜி.கே.வாசனிடம் நிருபர்கள் தி.மு.க.-த.மா.கா. கூட்டணி பற்றி கேட்டதற்கு ‘இருவரும் அரசியல் ரீதியாக சந்தித்து பேசியதன் அர்த்தம் அதுதானே’ என்றார்.

    இந்நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய ஜி.கே.வாசன் தி.மு.க-த.மா.கா கூட்டணியை சற்றுமுன் மதுராந்தகத்தில் உறுதி செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து ஜி.கே.வாசன் கூறுகையில் ''உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும்.

    தி.மு.க.-வுடன் இணைந்து த.மா.கா உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. தி.மு.க.-வுடன் கூட்டணி வைப்பது தா.மா.காவின் நிலைப்பாடு'' என்றார்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என திருநாவுக்கரசர் கூறிய நிலையில் தி.மு.க.-வுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×