search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய மேடையில் பெட்ரோல் குண்டுவீச்சு: தி.மு.க. தொண்டர் கைது
    X

    அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய மேடையில் பெட்ரோல் குண்டுவீச்சு: தி.மு.க. தொண்டர் கைது

    அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய மேடையில் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி ஓட முயன்ற தி.மு.க. தொண்டர் கைது செய்யப்பட்டார்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் நங்கவள்ளி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.

    இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

    தொடர்ந்து தி.மு.க.வை விமர்சித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடை முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து அமைச்சரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே மேடையையொட்டி மைக்செட் அமைத்திருந்த இடம் அருகே கையில் கேரி பேக்குடன் வாலிபர் ஒருவர் திடீரென வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் தன் கையில் வைத்திருந்த கேரி பேக்குக்குள் இருந்த பெட்ரோல் நிரப்பிய பாலித்தீன் குண்டை எடுத்து ஆவேசமாக மேடையை நோக்கி வீசினார்.

    இதில் பாலித்தீன் பை மேடையில் விழுந்து உடைந்ததால் பெட்ரோல் நாலாபுறமும் சிதறியது. உடனே அந்த வாலிபர் தயாராக வைத்திருந்த தீப்பெட்டி மூலம் தீயை கொளுத்தி அந்த பெட்ரோல் மீது போட்டார். இதில் மேடையின் முன்பகுதியில் இருந்த மைக்செட், ஆம்ப்ளிபர், பத்திரிகையாளர் ஒருவரின் கேமரா பை மற்றும் மேடையின் முன் பகுதி தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேடையின் முன்பு இருந்த அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்தபடி நாலா புறமும் சிதறி ஓடினர். அமைச்சர் பழனிச்சாமியும் மேடையின் நடுப்பகுதிக்கு ஒடினார். உடனே அங்கிருந்த அ.தி.மு.க.வினர் அவரை சூழ்ந்து நின்று பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

    பின்னர் கொளுந்து விட்டு எரிந்த தீயை பொதுமக்களும், பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் அணைத்தனர். இதனால் கூட்டமும் பாதியில் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே தப்பி ஓடிய அந்த வாலிபரை ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் விரட்டினர். அப்போது வழி தெரியாமல் அந்த வாலிபர் சாக்கடையில் விழுந்ததால் அவரை மாதேஸ்வரன் உள்பட பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    ஜலகண்டபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் போலீசார் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஜலகண்டாபுரம் சந்தை பேட்டை அருகே உள்ள மலையம்பாளையம் பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் குட்டி என்ற ஆனந்தகுமார் என்பதும், தி.மு.க. தொண்டரான இவர் தற்போது டீ மாஸ்டராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.

    அமைச்சரின் பேச்சால் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார் 6 பாலித்தீன் பைகளில் பெட்ரோலை நிரப்பி எடுத்து வந்ததும், ஒன்றன் பின் ஒன்றாக அதனை மேடையை நோக்கி வீச முடிவு செய்திருந்ததும், முதல் குண்டு வீச்சிலேயே தீ வேகமாக பிடித்ததால் பயந்து போன அவர் மற்ற பெட்ரோல் நிரப்பிய பாலித்தீன் பாக்கெட்களை அங்கேயே வீசி விட்டு தப்பியோட முயன்றதும் தெரிய வந்தது. பெட்ரோல் நிரப்பிய பாலித்தீன் பைகளை கைப்பற்றிய போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×