search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூர் ரெயிலை மறித்து தி.மு.க. போராட்டம்: துரைமுருகன் உள்பட 800 பேர் கைது
    X

    பெங்களூர் ரெயிலை மறித்து தி.மு.க. போராட்டம்: துரைமுருகன் உள்பட 800 பேர் கைது

    காட்பாடி-அரக்கோணம்-வாலாஜாவில் பெங்களூர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய துரைமுருகன் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தும் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் பல இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டம் செய்தனர். பெங்களூர் செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் நின்று கோ‌ஷம் எழுப்பினர். எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ஏ.பி.நந்தகுமார், மண்டல குழு தலைவர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட துரைமுருகன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    அரக்கோணத்தில் ரெயில் மறியல் போராட்டம் செய்ய தி.மு.க.வினர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

    அரக்கோணம் நகர தி.மு.க. செயலாளர் ராப்சன், கண்ணையன், ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர் சிட்டிபாபு உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் டபுள் டக்கர் ரெயிலை மறிக்க முயன்றனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    சிறிது நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கவுதம், தமிழ் மாறன், கருணாகரன், துரை குணசேகரன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்களும், தி.மு.க.வினரும் ரெயில் நிலைய முதலாவது பிளாட்பாரத்துக்கு சென்றனர்.

    அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் ரெயில் வந்தது. அதனை தி.மு.க.வினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., விடுதலை சிறுத்தையினர் 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மறியல் காரணமாக 15 நிமிடம் தாமதமாக பிருந்தாவன் ரெயில் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

    வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் தி.மு.க. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பெங்களூர் செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    பிருந்தாவன் ரெயிலை காட்பாடி ரெயில் நிலையத்திலும் தி.மு.க., விடுதலை சிறுத்தையினர் மறித்தனர்.

    வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்தமிழ்செல்வி தலைமையில் 500க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுக்க பேரிகார்டு வைத்திருந்தனர். அதனை தள்ளி விட்டு ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

    அப்போது போலீசாருக்கும் தி.மு.க.வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜி, நகர செயலாளர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சதாப்தி எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதேபோல் ஆம்பூரில் பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரெயிலை வழிமறித்து விடுதலை சிறுத்தையினர் போராட்டம் செய்தனர்.
    Next Story
    ×