என் மலர்tooltip icon

    செய்திகள்

    படப்பையில் அதிகாரி மனைவி கொலையில் புதிய திருப்பம்: கணவரே கொன்றதாக மாமியார் புகார்
    X

    படப்பையில் அதிகாரி மனைவி கொலையில் புதிய திருப்பம்: கணவரே கொன்றதாக மாமியார் புகார்

    படப்பையில் அதிகாரி மனைவி திவ்யாவின் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வரதட்சணை கேட்டு கணவரே கொன்றதாக மாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை சக்திநகரில் வசித்து வருபவர் கோவிந்தன். கார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி திவ்யா (வயது 28). இந்த தம்பதிக்கு தர்‌ஷன் (4), ரூபிகா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவர் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். திவ்யா மட்டும் தனியாக வீட்டில் இருந்தார்.

    மதியம் குழந்தைகளை கூட்டிக்கொண்டு கோவிந்தனின் உறவினர் வீட்டிற்கு வந்தபோது குளியல் அறையில் திவ்யா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோவிந்தனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டிற்கு வருவதற்குள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    திவ்யாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    திவ்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 45 பவுன் நகைகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது. நகைக்காகவே அவர் கொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    பட்டப்பகலில் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து இந்த பயங்கர செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் திவ்யாவின் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை நகைக்காக கொள்ளையர்கள் கொலை செய்யவில்லை. வரதட்சணை கேட்டு அவரது கணவரே கொன்றதாக திவ்யாவின் தாயார் அம்பிகா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் காஞ்சீபுரத்தில் இருந்து கதறி அழுதபடி ஓடோடி வந்த அவர் போலீசில் கொடுத்த புகாரில் கூறியதாவது:-

    என் மகளை கோவிந்தனுக்கு 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தோம். திருமணத்தின் போது 25 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தோம். திருமணம் ஆன நாளில் இருந்து வரதட்சணை கேட்டு அவர் கொடுமைப்படுத்தி வருகிறார். இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.

    நகை-பணம் கேட்டு என் வீட்டிற்கு திவ்யா பலமுறை வந்துள்ளார். அவளை சமாதானம் செய்து என்னிடம் இருந்த பணத்தை கொடுத்து அனுப்புவேன். பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வருவதாக அவள் என்னிடம் போனிலும் தெரிவித்தாள்.

    கேட்ட வரதட்சணை தராததால் அவளை அடித்து கொன்று விட்டு நகை கொள்ளை போனதாக நாடகம் ஆடுகிறார்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    இதையடுத்து போலீசாரின் விசாரணை மறு கோணத்தில் நடக்கிறது. தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குமார், பாஸ்கர் ஆகியோர் கோவிந்தனிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திவ்யாவை அவரது கணவரே கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    வரதட்சணை தொடர்பான தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

    திவ்யா கழுத்தில் கிடந்த தாலி சரடு அறுந்து வீட்டின் ஒரு பகுதியில் கிடந்துள்ளது. பீரோவில் இருந்த நகை எதுவும் கொள்ளை போகவில்லை எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    பிணமாக கிடந்த திவ்யாவின் முகத்தில் சிறு சிறு கீறல்கள், காயங்கள் இருந்துள்ளது.

    பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தாரா? தலையில் அடிபட்டு இறந்தாரா? என்பது போன்ற சந்தேகங்கள் தெளிவாகும்.
    Next Story
    ×