என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: நக்சலைட்டுகளுக்கு தொடர்பா?- சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை
    X

    ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: நக்சலைட்டுகளுக்கு தொடர்பா?- சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 8-ந் தேதி மேற்கூரையை துளையிட்டு ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருத்தாசலம்:

    சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 8-ந் தேதி மேற்கூரையை துளையிட்டு ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே போலீசார் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இந்தகொள்ளை சம்பவம் சேலத்தில் நடந்ததா? சின்ன சேலத்திற்கும், விருத்தாசலத்திற்கும் இடையில் நடந்ததா, சென்னையில் ரெயில் நின்ற இடத்தில் நடந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    பழைய குற்றவாளிகளுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கருதி அந்த பட்டியலை சேகரித்து விசாரித்தனர். 18 நாட்கள் ஆகியும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்று துப்பு துலங்கவில்லை.

    இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு ரெயில் மெதுவாக வரவாய்ப்பு உள்ளது. மேலும் ரெயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும். அங்கு என்ஜீன் மாற்றப்பட்டு பின்னர் புறப்பட்டு செல்லும் அந்த நேரத்தில் இந்த கொள்ளை நடத்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    இதையொட்டி சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி தலைமையில் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் கடந்த 15-ந் தேதி முதல் விருத்தாசலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த ரெயில் நின்ற இடம், ரெயில் என்ஜின் நின்ற இடம் ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு யார் யார்? அதிகமாக செல்போன் பேசியிருக்கிறார்கள். என்று போலீசார் விசாரித்தனர்.

    மேலும் விருத்தாசலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநில வாலிபர்கள் லாட்ஜுகளில் தங்கி இருந்தார்களா? என்றும் விசாரணை மேற்கொண்டனர்.

    விருத்தாசலத்தில் இருந்து சின்னசேலம் வரை ரெயில் தண்டவாளம் அருகே தடயங்கள் ஏதும் சிக்குகிறதா? என்று பார்வையிட்டனர். ஆனால் எந்த வித தடயங்களும் சிக்கவில்லை.

    இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கூடுதலாக விசாரிக்கும்படி கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீசாருக்கு சி.பி.சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    விருத்தாசலம் அருகே மு.பரூர் மற்றும் சின்னசேலம் கொரக்கவாடி, கெங்கராம் பாளையம், கூத்தக்குடி ஆகிய பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் நடமாடுகிறார்களா? என்று பொதுமக்களிடம் விசாரித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பாலம் கட்டும் பணி, ரோடு போடும் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அந்த பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமா? என்று கேட்டறிந்தனர். அந்தபகுதியில் உள்ள ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் விசாரித்தனர்.

    ரெயிலில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடியை கொள்ளையடித்த சம்பவம் முதல்முறையாக நடந்துள்ளது. மிக நுணுக்கமான முறையில் இந்த கொள்ளை சம்பவம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே உள்ளூர் கொள்ளையர்கள் இந்த முறையில் கொள்ளையடிக்க வாய்ப்பில்லை என்று கருகிறார்கள்.

    வடமாநிலத்தில் உள்ள கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று போலீசார் உறுதியாக நம்புகின்றனர்.

    நக்சலைட்டுகளின் தூண்டுதலின் பேரிலேயே வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்தில் பெரிய அளவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வடமாநிலத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் உள்ள இளைஞர்களை நக்சலைட்டுகள் அழைத்து சென்று அவர்களுக்கு சாதகமாக பேசுகிறார்கள். பெரிய அளவில் கொள்ளை அடித்துக்கொண்டு பணத்தை கொண்டு வாருங்கள் உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்கிறோம் என்று கூறுகிறார்கள். அந்த இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பாலம் கட்டும் பணி மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    நகைக்கடை, வங்கிகள் ஆகியவைகளை நோட்டமிடுகின்றனர். சுவரில் துளைபோட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் நக்சலைட்டுகள் சம்பளம் கொடுக்கிறார்கள்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுவரில் துளைபோட்டு அடகு கடையில் ரூ.1½ கிலோ நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடம் 50 கிராமம் தங்க நகைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மீதி நகைகளை அவர்கள் நக்சலைட்டிடம் கொடுத்திப்பதாக தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் நக்சலைட்டுகளின் தூண்டுதலின்பேரில் வடமாநில கொள்ளையர்கள் மிக நுணுக்கமான முறையில் ரூ.6 கோடியை கொள்ளையடித்து சென்று நக்சலைட்டிடம் அவர்கள் கொடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    எனவே விருத்தாசலத்தில் இருந்து சேலம் வரை உள்ள பகுதிகளில் நக்சலைட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாரும் இருக்கிறார்களா? என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×