என் மலர்
செய்திகள்

மணப்பாறை அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கொன்ற கணவன்
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வடக்குப்பட்டி அரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 41), பால் வியாபாரி. இவருக்கும் வளநாடு தோப்புப்பட்டி பகுதியை சேர்ந்த பொன்னழகு (38) என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது இருவரும் பழனியில் வசித்து வருகின்றனர். பால் வியாபாரம் செய்து வரும் கிருஷ்ணன் காலையில் சென்றுவிட்டு மாலை தான் வீடு திரும்புவார். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் பொன்னழகுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து கிருஷ்ணனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவி பொன்னழகிடம் சதீஷின் பழக்கத்தை கைவிடுமாறு பலமுறை கூறி எச்சரித்துள்ளார்.
ஆனால் பொன்னழகு தொடர்ந்து சதீசுடன் பழகி வந்தார். இதனால் விரக்கி அடைந்த கிருஷ்ணன் சொந்த ஊரான அரியம்பட்டிக்கு செல்வதற்காக நேற்று மணப்பாறை அருகே உள்ள வடக்கிப்பட்டி வந்தார். அவரை பின்தொடர்ந்து பொன்னழகும் வடக்கிப்பட் டிக்கு வந்தார். இருவரும் அங்கிருந்து அரியம்பட்டிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அந்த பகுதியில் செயல்படாமல் இருந்து கல்குவாரி அருகே இருவரும் சென்று கொண்டு இருந்த போது அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து பொன்னழகின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இறந்த பொன்னழகின் உடலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் வீசிய கிருஷ்ணன் அங்கிருந்து நேராக மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. கீதா, இன்ஸ்பெக்டர் பழனிமுத்து (பொறுப்பு) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொன்னழகின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.