search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அருகே கியாஸ் டேங்கர் லாரி - டெம்போ மோதி விபத்து: 4 பேர் பலி
    X

    ஆத்தூர் அருகே கியாஸ் டேங்கர் லாரி - டெம்போ மோதி விபத்து: 4 பேர் பலி

    ஆத்தூர் அருகே கியாஸ் டேங்கர் லாரியும் டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் இருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு டெம்போ வேன் ஒன்று தலைவாசல் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 14 பேர் தக்காளி லோடுக்கு மேல் பகுதியிலும், டிரைவர் இருக்கையின் அருகிலும் அமர்ந்திருந்தனர்.

    அப்போது, ஆத்தூர் நான்கு வழிச்சாலையில் முள்ளைவாடி என்ற இடத்தில் வந்தபோது டெம்போ வேனும், சென்னையில் இருந்து ஈரோட்டை நோக்கி சென்ற கியாஸ் டேங்கர் லாரியும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திடீரென நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் தக்காளி லோடு ஏற்றி வந்த டெம்போ வேனின் முன்பகுதியும் சிதைந்தது.

    இந்த விபத்தில் தக்காளி லோடு டெம்போவில் இருந்த சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள மொரசம்பட்டு பகுதியை சேர்ந்த தீர்த்தன் (வயது 28), ராமன் (25) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    தக்காளி லோடின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த பெரண்டூர், சின்னதம்பி, ராமகண்ணு, ஜெயமணி, கனகராஜ், ராமசாமி, மற்றொரு ராமன், காமராஜ், மொட்டையன், குமார், மற்றொரு தீர்த்தன் ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும், டெம்போ வேன் டிரைவர் செல்வராஜ், கியாஸ் டேங்கர் லாரி டிரைவர் கந்தசாமி ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் மற்றொரு தீர்த்தன், குமார் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் அந்த டெம்போ வேனையும், கியாஸ் டேங்கர் லாரியும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி ஓரமாக நிறுத்தினர். பின்னர் சாலையில் சிதறி கிடந்த ஏராளமான தக்காளிகளையும் பீன்ஸ்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    Next Story
    ×