என் மலர்
செய்திகள்

ஊட்டி அருகே கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்
காந்தல்:
ஊட்டி அருகே எலவள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருபவர் வரதராஜன் ( வயது 52).
இன்று காலை 7 மணியளவில் வரதராஜன் வழக்கம் போல் வீட்டில் இருந்து தொழிற்சாலைக்கு வேலைக்காக நடந்து சென்றார்.
அப்போது ஒரு தேயிலை தோட்டம் வழியாக வரதராஜன் சென்றார். அந்த சமயத்தில் திடீரென ஒரு கரடி எதிரில் வந்தது.
இதனால் திடுக்கிட்ட வரதராஜன், கரடியிடம் இருந்து தப்பிக்க தலைக்கெறிக்க ஓடினார். ஆனால் கரடியும் விடாமல் அவரை துரத்தி பிடித்தது.
பின்னர் வரதராஜனை தாக்கி அவரது தொடை, கை, கால்களை கடித்தது. இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் அவர் கூச்சல் போட்டார்.
உடனே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் கூச்சல் போட்டு கரடியை விரட்டினர்.
பின்னர் காயம் அடைந்த வரதராஜனை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதனால் வனத்துறையினரும் கரடியை காட்டுக்குள் விரட்ட கண்காணித்து வருகிறார்கள்.