என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறிஞ்சிப்பாடி அருகே நள்ளிரவில் என்.எல்.சி. ஊழியர் வீட்டில் ரூ.33 லட்சம் கொள்ளை
    X

    குறிஞ்சிப்பாடி அருகே நள்ளிரவில் என்.எல்.சி. ஊழியர் வீட்டில் ரூ.33 லட்சம் கொள்ளை

    குறிஞ்சிப்பாடி அருகே நள்ளிரவில் என்.எல்.சி. ஊழியர் வீட்டில் ரூ.33 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தாளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 61). என்.எல்.சி.யில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.

    இவர் சித்தாளிகுப்பத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் ஒரு பகுதியில் வெங்கடாசலம், அவரது மனைவி சரோஜா படுத்து தூங்கினர். மற்றொரு அறையில் அவரது மகன் இளங்கோ, மருமகள் காயத்திரி, பேரன்கள் கார்த்திக், ஆனந்த் ஆகியோர் படுத்திருந்தனர்.

    நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்தனர். வெங்கடாசலம் தூங்கி கொண்டிருந்த அறையின் வெளிபக்க கதவை பூட்டினர். இதையடுத்து மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த ரூ.33 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்த வெங்கடாசலம் கதவு பூட்டியிருப்பதை கண்டார். பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளைபோயிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் வெங்கடாசலம் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன், இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளையர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் குறிஞ்சிப்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×