என் மலர்
செய்திகள்

காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து விபத்து: பிளஸ்-2 மாணவி பலி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பனங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகள் திவ்யா (வயது17). இவர் சூசையப்பர்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த மதுமிதா, பிரவீனா, ஆர்த்தி, சங்கீதா, வைஷ் ணவி உள்பட 8 பேரும் சூசையப்பர்பட்டினத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். திவ்யா உள்பட 9 பேரும் ஒரு காரில் தினமும் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
அதன்படி இன்று காலை திவ்யா உள்பட 9 மாணவிகள் காரில் பள்ளிக்கு புறப்பட்டனர். காரை கருணாகரன் என்பவர் ஓட்டினார். பனங்கரை அருகே உள்ள நடேசபுரம் பகுதியில் கார் வந்தபோது, திடீரென காரின் முன்டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கியது.
காரில் பயணம் செய்த திவ்யா, சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். மற்ற 8 மாணவிகள், டிரைவர் கருணாகரன் படுகாயம் அடைந்தனர்.
உடனே அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






