என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை: இடிதாக்கி 3 பேர் பலி
    X

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை: இடிதாக்கி 3 பேர் பலி

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. அப்போது இடிதாக்கி 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. ஸ்ரீமுஷ்ணம், காட்டு மன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

    சோழதரம் அருகே உள்ள பு.குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 45). விவசாயி. இவரும் அவரது மனைவி அஞ்சாயாளும் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பலத்த மழை கொட்டியதால் அவர்கள் அந்த பகுதியில் உள்ள மரத்தின் அடியில் ஒதுங்கினர். அப்போது திடீரென்று இடி தாக்கியது. இதில் ராமலிங்கம், அஞ்சாயாள் இருவரும் அதே இடத்தில் உடல் கருகி பலியானார்கள்.

    இதுகுறித்து சோழதரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இடிதாக்கி பலியான கணவன்-மனைவி உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இடி தாக்கி இறந்த தம்பதியருக்கு அன்பழகி, பவானி, ராஜவள்ளி ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

    ராஜவள்ளிக்கு திருமணம் ஆகவில்லை. அன்பழகி, பவானி ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. இறந்த தாய்-தந்தையின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பார்ப்பவரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கோவுலாபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(58). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த தயா, கங்காதரன் ஆகியோருடன் டீக்கடை அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று இடிதாக்கியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.

    தயா, கங்காதரன் ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×