என் மலர்tooltip icon

    செய்திகள்

    தைவானில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட மலைப்பாம்பு குட்டி பிடிபட்டது
    X

    தைவானில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட மலைப்பாம்பு குட்டி பிடிபட்டது

    தைவானில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு குட்டி பிடிபட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால்கள் உள்ளிட்டவை சோதனைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும். அதே போல் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய தபால்களும் சோதனைக்கு பின்னர் தான் அதற்குரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    இந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள சந்தோஷ் என்பவருக்கு வீட்டு உபயோக பொருட்கள் கொண்ட ஒரு அட்டை பெட்டி பார்சல் தைவானில் இருந்து தபால் துறை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தது.

    இதை தபால் துறை அதிகாரிகள் ஸ்கேனிங் கருவி முலம் சோதனை செய்தபோது அதில் அபாயகரமான பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அந்த அட்டை பெட்டியை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க இலாகா தபால் பிரிவு உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் அட்டை பெட்டியை பிரித்து பார்த்தபோது அதில் தேனீர் கப் ஒன்றும் ஒரு பையும் இருந்தது.

    அந்த பையை பிரித்து பார்த்த போது, அதில் ஒரு அடி நீளமுள்ள மலைப்பாம்பு குட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெட்டியில் இருந்த முகவரியை ஆய்வு செய்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. எனவே அந்த மலைப்பாம்பு குட்டி சென்னைக்கு கடத்தி வரப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    இது பற்றி சுங்க இலாகா உதவி கமிஷனர் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில், தைவானில் இருந்து வந்த பார்சலில் இருந்து மலைப்பாம்பு குட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னை சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
    Next Story
    ×