என் மலர்
செய்திகள்

பனை தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: கிரிராஜ்சிங் பேட்டி
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் மேட்டு வளவு என்ற இடத்தில் தனியார் பனை பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு மத்திய சிறு குறு தொழில் துறை இணை மந்திரி கிரிராஜ்சிங் பனை மரம் ஏற கூடிய புதிய கருவி, பனை சர்க்கரை, பனை பழரசம், பனை கிழங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
2050–ம் ஆண்டில் 10–ல் ஒருவருக்கு தான் தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே அதிக தண்ணீர் பயன்பாடு இல்லாமல் அதிக அளவில் உற்பத்தி செய்ய கூடிய பனை சர்க்கரையை ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 40 டன் வரை உருவாக்க முடியும்.
பனை பொருட்கள் அனைத்தும் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், பொட்டாசியம், தாது பொருட்களை கொடுக்கிறது. தற்போது கரும்பு ஆலைகளின் ஆதிக்கத்தால் பனை தொழில் நலிந்து விட்டது. 1967–ல் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் பனை தொழிலை ஊக்கப்படுத்த இந்த பகுதி உள்பட அனைத்து இடங்களிலும் நல வாரியம் ஏற்படுத்தினார். ஆனால் தற்போது 20 சதவீத மக்கள் தான் பனை தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பனை தொழலை ஊக்கப்படுத்தவும், புரட்சி ஏற்படுத்தவும் நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். கிராம பொருளாதாரத்தை வளர்க்க கூடியதான இந்த பனை தொழிலை கதர் வாரியம் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் இந்த தொழிலை நாட்டின் பிற பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தவும் உறுதி எடுத்துள்ளோம்.
மேலும் பனை தொழிலை பற்றி விரிவான அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக முதல்வரிடம் கூறி இந்த தொழிலுக்கு புத்துயிர் அளிக்கவும் நான் பரிந்துரை செய்வேன்.
இவ்வாறு மத்திய மந்திரி கிரிராஜ்சிங் கூறினார்.
தொடர்ந்து அவர் பனை மரத்தில் கிடைக்க கூடிய பொருட்களால் செய்த உணவு பண்டங்களான கருப்பட்டி பனைக்கிழங்கு ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டார். இவை மிகவும் சுவையாக உள்ளது என கூறினார்.
அப்போது கதர் கமிஷன் மாநில இயக்குனர் தனபால், கதர் வாரிய மண்டல உறுப்பினர் சந்திரமவுலி கோபி தாசில்தார் குமரேசன், கிராம நிர்வாக அலுவலர் நவாப் ஜான், ஊராட்சி உறுப்பினர் மகுடேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.






