என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் பூங்காவில் முட்டையிலிருந்து வெளிவந்த 36 மலைப்பாம்பு குட்டிகள்
    X

    வண்டலூர் பூங்காவில் முட்டையிலிருந்து வெளிவந்த 36 மலைப்பாம்பு குட்டிகள்

    வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் முட்டைகள் பொரித்து 36 மலைப்பாம்பு குட்டிகள் வெளிவந்தன.
    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 26 இந்திய மலைப் பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு பெண் மலைப்பாம்பு இனச்சேர்க்கை செய்து கடந்த ஏப்ரல் மாதம் 41 முட்டைகளை இட்டது. இம்முட்டைகளை பெண் மலைப்பாம்பு அடைகாத்து வந்தது.

    சுமார் 58 நாட்கள் கழித்து கடந்த 23-ந் தேதி 36 மலைப்பாம்பு குட்டிகள் முட்டையிலிருந்து வெளி வந்தன. பாம்பு குட்டிகளின் சராசரி நீளம் 45 முதல் 60 செ.மீ ஆகும்.

    தற்போது பிறந்துள்ள மலைப்பாம்பு குட்டிகளை நல்ல முறையில் வளர்க்கும் பொருட்டு தனியே பிரித்து, பாம்புகள் இல்லம் பின்புறம் உள்ள மரங்கள் சூழ்ந்த வளாகத்தில் தனித்தனி மண்பானைகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.

    பாம்பு குட்டிகள் பிறந்த ஒரிரு வாரங்களுக்கு உணவு ஏதும் உட்கொள்ளாது. அதன் பிறகு குட்டிகளுக்கு பூங்காவிலுள்ள எலிகள் இனப்பெருக்க மையத்தில் இருந்து ஒரு வாரம் வயதுள்ள எலிக் குட்டிகள் உணவாக வழங்கப்படும்.

    மலைப்பாம்பு குட்டிகள் நன்கு வளர்ந்தவுடன் பாம்புகள் இல்லத்தில் பார்வையாளர்களுக்காக வைக்கப்படும் என்று பூங்கா இயக்குனர் ரெட்டி கூறினார்.

    Next Story
    ×