என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் வனப்பகுதியிலும் ஒற்றை யானை அட்டகாசம் - மக்கள் பீதி
    X

    பவானிசாகர் வனப்பகுதியிலும் ஒற்றை யானை அட்டகாசம் - மக்கள் பீதி

    பவானிசாகர் அருகே பொதுமக்களை பயமுறுத்தும் ஒற்றை யானையால் மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாட அப்பகுதி மக்கள் மிகவும் பீதியுடன் உள்ளனர்.
    பு.புளியம்பட்டி:

    கோவை அடுத்த மதுக்கரையில் ஒரு ஒற்றை யானை அப்பகுதி மக்களை பயமுறுத்தி வந்தது. இந்த யானை மயக்க ஊசி போட்டு 2 கும்கி யானைகளால் லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களின் அச்சமும் தீர்ந்து உள்ளது.

    இதேபோல் தற்போது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதி விளாமுண்டி காட்டிலிருந்து ஒரு ஒற்றை யானை கடந்த சில நாட்களாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த ஒற்றை யானை கடந்த ஒரு வாரமாக இரவு 10 மணிக்கு மேல் காட்டிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுகிறது. புங்கார், பெரியார் நகர், அண்ணா நகர் வழியாக பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு சென்று தண்ணீர் குடித்துவிடடு அங்கேயே சுற்றுகிறது.

    அதன் பிறகு தெங்குமரகடா செல்லும் காராச்சி கோரை ஊருக்குள் புகுந்து அங்கேயே விடிய விடிய சுற்றுகிறது. வழியில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்தும் பயிர்களை துவம்சம் செய்கிறது. அதன்பிறகு காலை 6 மணியானதும் அந்த ஒற்றை யானை காட்டுக்குள் புகுந்து விடுகிறது. மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் ஊர்களுக்குள் புகுந்து விடுகிறது.

    தினமும் ஒற்றை யானை ஊர்களுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் மிகவும் பீதியுடன் உள்ளனர். எந்த நேரத்தில் அந்த ஒற்றை யானை எங்கு நிற்குமோ..? என்ற பயத்தில் அப்பகுதி மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படுகிறார்கள்.

    இப்படி தினம்..தினம் அச்சுறுத்தி வரும் இந்த ஒற்றை யானையை வனப்பகுதி உள்ளே விரட்டியடிக்க வேண்டும். அல்லது கோவை மதுக்கரையில் ஒற்றை யானையை பிடித்தது போல் பவானிசாகர் மற்றும் பு.புளியம்பட்டி பகுதியில் சுற்றி திரியும் இந்த ஒற்றை யானையையும் வனத்துறையினர் கும்கி யானைகள் மூலம் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
    Next Story
    ×