என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே ரெயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்: நீண்ட நேரம் கேட் மூடப்பட்டதால் ஆத்திரம்
    X

    அரியலூர் அருகே ரெயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்: நீண்ட நேரம் கேட் மூடப்பட்டதால் ஆத்திரம்

    அரியலூர் புதிய அகல ரெயில் பாதையில் ரெயிலை இயக்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொது மக்கள் ஆத்திரமடைந்து ரெயிலை மறித்து கல்வீசி தாக்கினர். இதில் ஹவுரா எக்ஸ்பிரஸ் என்ஜின் கண்ணாடி சேதமடைந்தது.
    அரியலூர்:

    அரியலூர் ரெயில்வே ஸ்டேஷன் அருகே அரியலூர்-பெரம்பலூர் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்படுவதால் இந்த கேட் தினமும் 50 முறைக்கு மேல் மூடப்பட்டு திறக்கப்படுவது வழக்கம். அரியலூரில் இருந்து ஆர்.எஸ்.மாத்தூர் வரை 2-வது அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் நேற்று மாலை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மாலை 4-30மணிக்கு இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதமாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 5-30மணிக்கு புதிய பாதையில் ரெயில் இயக்கப்பட்டது. அதன் பின்னரும் கேட் திறக்கப்படவில்லை.

    அப்போது அல்லி நகரத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ரெயில்வே கேட்டில் சிக்கி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

    அப்போது குருவாயூர் எக்ஸ்பிரசை தொடர்ந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் வேகம் குறைக்கப்பட்ட நிலையில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தது. அதைக்கண்டு பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் திடீரென்று ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலர் கற்கள் வீசி தாக்கியதில் ரெயில் என்ஜின் கண்ணாடி உடைந்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×