என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு மீண்டும் அதிகரிப்பு
    X

    குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு மீண்டும் அதிகரிப்பு

    குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் குடிநீர் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது.

    இதன் அடிப்படையில் கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக குடிநீருக்கான தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு முதல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது, வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டுள்ளது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.16 அடியாக இருந்தது. வினாடிக்கு 93 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது.

    அடுத்த பருவமழை காலமான ஜூன் மாதத்திற்கு இன்னும் சுமார் 35 நாட்கள் உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 53 அடியாக குறைந்துள்ளதால் குறித்த நேரத்தில் பருவமழை கைகொடுத்தால் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி திறந்து விட முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×