search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை விமான நிலையத்தில் 1.97 லட்சம் சதுர மீட்டரில் பிரமாண்டமாக உருவான ஒருங்கிணைந்த முனையம்
    X

    சென்னை விமான நிலையத்தில் 1.97 லட்சம் சதுர மீட்டரில் பிரமாண்டமாக உருவான ஒருங்கிணைந்த முனையம்

    • பணிகள் முடிவடைந்த பின்பு ஒருங்கிணைந்த முனையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்கள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தற்போது இருப்பதை காட்டிலும் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 45 விமானங்களை இயக்க முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் உருவாகி வருகிறது.

    இந்தப் பணி 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்ட கட்டிடங்கள், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் முடிவடைந்து இருக்க வேண்டும்.

    ஆனால் நிலங்கள் கையகப்படுத்துவது, தரையில் பாறைகள் இருந்ததால் பணிகள் தாமதம், கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வந்தன.

    இந்நிலையில் தற்போது ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்ட கட்டிடப் பணி முழுவதும் நிறைவடைந்துள்ளன. இந்த புதிய முனையம் விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி பயணிகளை கையாள முடியும். இந்த முனையம் முழுவதும் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு உள்ளன. அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளில் ஜொலிக்கின்றன.

    மேலும் இந்த கட்டிடத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பெருமைகளை பிரதிபலிக்கும் வண்ணமாக, வண்ணமயமான கோலங்கள், படங்கள், ஓவியங்கள் தனித்துவத்தில் வரையப்பட்டுள்ளன.

    80 சோதனை கவுண்டர்கள், 8 சுய சோதனை கவுண்டர்கள், 6 லக்கேஜ் கவுண்டர்கள் மற்றும் 108 குடியுரிமை அதிகாரிகள் சோதனை கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு எளிதில் செல்ல முடியும்.

    ஒருங்கிணைந்த முனையத்தின் 2-வது கட்ட பணி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்பு ஒருங்கிணைந்த முனையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்கள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்படி இணைக்கும்போது, தற்போது இருப்பதை காட்டிலும் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 45 விமானங்களை இயக்க முடியும். அதேபோல் ஒரு ஆண்டுக்கு சுமார் 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் உடையதாக விமான நிலையம் அமையும்.

    புதிதாக அமைந்து உள்ள ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச தரத்துடன் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. பிரதமர் மோடியின் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பயணிகளின் பொருட்களை கொண்டு செல்லும் கன்வேயர் மற்றும் அனைத்து வசதிகளின் சோதனை தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அங்கு பைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், கைவினைப்பொருட்கள், காதி பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அமைக்க ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஒருங்கிணைந்த புதிய முனையத்தில் அதிக இடம் கிடைக்கும் என்பதால் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏற்கனவே, ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகியவை தங்கள் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளன. ஒருங்கி ணைந்த புதிய முனையத்தின் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×