என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17 சிலைகள் மீட்பு- போலீசார் நடவடிக்கை
- தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மீட்கப்பட்ட சிலைகள் தமிழகத்தில் எந்த கோவிலில் திருடப்பட்டது, என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர் வீட்டில் விலை மதிக்க முடியாத ஏராளமான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக கோவில்களில் திருடப்பட்ட அந்த சிலைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி.ஜெயந்த் முரளி உத்தரவிட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான தனிப்படை போலீசார், குறிப்பிட்ட வீட்டில் சோதனை போட்டனர். சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 கல் சிலைகள், 4 உலோக சிலைகள், மரத்திலான கலைப்பொருட்கள், ஒரு ஓவியம் உள்ளிட்ட 20 பழமையான கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
சிலைகள் உள்ளிட்ட கலைப்பொருட்களை, குறிப்பிட்ட பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர், பிரான்ஸ் நாட்டுக்கு கடத்திச்செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் கடத்திச்செல்ல முடியவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மீட்கப்பட்ட சிலைகள் தமிழகத்தில் எந்த கோவிலில் திருடப்பட்டது, என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. சிலைகளை மீட்ட தனிப்படை போலீசாரை, டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார்.






