search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை
    X

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை

    • மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது.
    • வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து கடந்த 4-ந்தேதி 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 26 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மகேந்திரன், மதன், வசந்த், மெல்வின், சத்தியராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் 11-ந்தேதி மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக் (24), தேவராஜ் (35), சுரேஷ் (47), திருமேனி (31), வேல்முருகன் (29), சுந்தரம் (47) ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவார கால இடைவெளியில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டது சக மீனவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலையற்ற அரசு நீடிக்கிறது. வன்முறை, போராட்டம் என கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது. கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் மீதான வழக்கு இன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 11 மீனவர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி நெடுந்தீவு அருகே கைதான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரும் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை மீனவர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

    Next Story
    ×