search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தேசிய விளையாட்டு போட்டி: தமிழகத்தின் பவானிதேவி, பிரவீன் தங்கம் வென்று அசத்தல்
    X

    தேசிய விளையாட்டு போட்டி: தமிழகத்தின் பவானிதேவி, பிரவீன் தங்கம் வென்று அசத்தல்

    • காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கமங்கையாக ஜொலித்தார்.
    • ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்ற முதல்இந்தியர் என்ற சிறப்புக்குரிய தமிழகத்தின் பவானிதேவி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார்.

    ஆமதாபாத்:

    தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் பவானிதேவி, பிரவீன் சித்ரவேல் தங்கப்பதக்கம் வென்றனர்.

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கமங்கையாக ஜொலித்தார்.

    அவர் ஸ்னாட்ச் முறையில் 84 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 107 கிலோ என்று மொத்தம் 191 கிலோ எடை தூக்கி முதலிடத்தை பிடித்தார். மற்றொரு மணிப்பூர் வீராங்கனை சஞ்சிதா சானு (187 கிலோ) வெள்ளிப்பதக்கமும், ஒடிசாவின் சினேகா சோரன் வெண்கலப்பதக்கமும் (169 கிலோ) பெற்றனர்.

    பின்னர் மீராபாய் சானு கூறுகையில் 'சமீபத்தில் பயிற்சியின் போது இடது கைமணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதனால் 'ரிஸ்க்' வேண்டாம் என்று தான் இந்த போட்டியில் 3-வது முயற்சியை பயன்படுத்தவில்லை. அடுத்து டிசம்பரில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராக வேண்டி இருக்கிறது' என்றார்.

    தடகளத்தில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை தாண்டுதல்) தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்பு இந்த பந்தயத்தில் 2015-ம் ஆண்டு ரஞ்சித் மகேஷ்வரி 16.66 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது.

    அதனை முறியடித்து அசத்திய 21 வயதான பிரவீன் திருவாரூர் மாவட்டம் செட்டிசத்திரம் அருகே உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆவார். கேரளாவின் ஏ.பி.அர்ஜூன் வெள்ளிப்பதக்கமும் (16.08 மீட்டர்), பஞ்சாப்பின் அர்பிந்தர் சிங் வெண்கலப்பதக்கமும் (15.97 மீட்டர்) கைப்பற்றினர்.

    ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்ற முதல்இந்தியர் என்ற சிறப்புக்குரிய தமிழகத்தின் பவானிதேவி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். வாள்வீச்சு சாப்ரே பிரிவின் இறுதி ஆட்டத்தில் அவர் 15-3 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பின் ஜக்மீத் கவுரை தோற்கடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

    சென்னையில் வசிக்கும் 29 வயதான பவானிதேவி ஏற்கனவே 2011, 2015-ம் ஆண்டுகளில் நடந்த தேசிய விளையாட்டிலும் வாகை சூடியிருக்கிறார். இதன் ஆண்கள் பாயில் பிரிவில் தமிழக வீரர் வினோத்குமாருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத் வீராங்கனை இளவேனில் 16-10 என்ற கணக்கில் கர்நாடகாவின் திலோத்தமா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இளவேனில் குஜராத் அணிக்காக களம் இறங்கினாலும் அவரது சொந்த ஊர் கடலூர் என்பது நினைவு கூரத்தக்கது.

    பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஸ்வப்னா பர்மன் (மத்தியபிரதேசம்) 1.83 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். கர்நாடகாவின் அபினயா ஷெட்டி வெள்ளிப்பதக்கமும் (1.81 மீட்டர்), தமிழகத்தின் கிரேஸ் மெர்லி (1.81 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். கிரேஸ் மெர்லி கன்னியாகுமாரியைச் சேர்ந்தவர்.

    20 கிலோமீட்டர் நடைபந்தயத்தில் உத்தரபிரதேச வீராங்கனை முனிதா பிரஜபதி போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அவர் இலக்கை அடைய 1 மணி 38.20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.

    பெண்களுக்கான கபடியின் அரைஇறுதியில் தமிழக அணி 25-45 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது.

    பதக்கப்பட்டியலில் மேற்கு வங்காளம் 5 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என்று 11 பதக்கத்துடன் முதலிடத்திலும், அரியானா 8 பதக்கத்துடன் (4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) 2-வது இடத்திலும் உள்ளன. தமிழகம் 2 தங்கம், 4 வெண்கலம் வென்று 6 பதக்கத்துடன் 8-வது இடம் வகிக்கிறது.

    Next Story
    ×