search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய விளையாட்டு போட்டி: 73 பதக்கங்களை குவித்து இந்தியா புதிய சாதனை
    X

    ஆசிய விளையாட்டு போட்டி: 73 பதக்கங்களை குவித்து இந்தியா புதிய சாதனை

    • துப்பாக்கி சுடுதலில் 7 தங்கமும், தடகளத்தில் 4 தங்கமும், டென்னிஸ், குதிரையேற்றம், ஸ்குவாஷ், பெண்கள் கிரிக்கெட் ஆகியவற்றில் தலா ஒரு தங்கமும் கிடைத்து இருந்தது.
    • வில்வித்தை போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

    ஹாங்சோவ்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 330 வீரர்களும், 328 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 661 பேர் கலந்து கொண்டுள்ளனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நேற்றைய 11-வது நாள் போட்டி முடிவில் இந்திய அணி 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் ஆக மொத்தம் 69 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    போட்டியின் 12-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு முதலில் வெண்கலம் பதக்கம் கிடைத்தது. 35 கி.மீ. தூர கலப்பு இரட்டையர் நடைப்பந்தயத்தில் இந்திய ஜோடிக்கு பதக்கம் கிடைத்தது.

    ஆசிய விளையாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் மஞ்சு ராணி, ராம் பாபு ஜோடி 5 மணி 51 நிமிடத்தில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.

    இந்த பிரிவில் சீனாவுக்கு தங்கமும், ஜப்பானுக்கு வெள்ளியும் கிடைத்தது.

    அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 16-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. வில்வித்தை போட்டி மூலம் இந்த தங்கம் கிடைத்தது.

    ஓஜாஸ் தியோடேல்-ஜோதிசுரேகா ஜோடி வில்வித்தை காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முத்திரை பதித்தது. இந்த ஜோடி இறுதிப்போட்டியில் 159-158 என்ற கணக்கில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தியது.

    துப்பாக்கி சுடுதலில் 7 தங்கமும், தடகளத்தில் 4 தங்கமும், டென்னிஸ், குதிரையேற்றம், ஸ்குவாஷ், பெண்கள் கிரிக்கெட் ஆகியவற்றில் தலா ஒரு தங்கமும் கிடைத்து இருந்தது.

    வில்வித்தை போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைத்தது.

    16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம், ஆக மொத்தம் 73 பதக்கங்களை இதுவரை இந்தியா பெற்றுள்ளது. 8-ந் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2018-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 70 பதக்கம் பெற்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

    அந்த போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் ஆக மொத்தம் 70 பதக்கங்களை பெற்று இருந்தது.

    Next Story
    ×