search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் இன்று மோதல்
    X

    தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் அஷன் குமார், கேப்டன் சாகர் ரதி ஆகியோர் பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் இன்று மோதல்

    • புரோ கபடி லீக்கில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    சென்னை:

    10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும.

    இந்த கபடி திருவிழா நீண்ட இடைவெளிக்கு பிறகு எல்லா அணிகளுக்கும் உரித்தான நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஆமதாபாத், பெங்களூரு, புனே ஆகிய இடங்களில் ஏற்கனவே நடந்த சுற்று முடிவில் புனேரி பால்டன் (5 வெற்றி, ஒரு தோல்வி) 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் (3 வெற்றி, ஒரு தோல்வி, 2 'டை') 21 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (3 வெற்றி, 2 தோல்வி, ஒரு 'டை') 20 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அரியானா ஸ்டீலர்ஸ் (4 வெற்றி, ஒரு தோல்வி) 20 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

    இந்த நிலையில் 4-வது சுற்று போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

    இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் (இரவு 8 மணி) மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன. சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 11-வது இடத்தில் உள்ளது. நீரஜ் குமார் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. 4 ஆண்டுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அஷன் குமார் நேற்று அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடரை நாங்கள் நன்றாக தான் தொடங்கி இருக்கிறோம். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் நாங்கள் டாப்-6 இடங்களுக்குள் முன்னேற முடியும். எங்கள் அணியில் துடிப்பான இளம் வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எங்களது ஆட்டத்தில் பலவீனம் எதுவுமில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவாக இருக்கின்றனர். ரசிகர்களின் ஆதரவு ஈடுஇணையற்ற சக்தியாகும். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நன்றாக தயாராகி இருக்கிறோம்.' என்றார்.

    தமிழ் தலைவாஸ் கேப்டன் சாகர் ரதி கூறுகையில், 'இந்த சீசனை மறக்க முடியாததாக மாற்ற தயாராகி வருகிறோம். சொந்த மைதானத்தில் பிரகாசிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்' என்றார்.

    Next Story
    ×