என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக் இன்றுடன் நிறைவு: பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிளுக்கு ஏற்பாடு
    X

    பாரீஸ் ஒலிம்பிக் இன்றுடன் நிறைவு: பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிளுக்கு ஏற்பாடு

    • பதக்கப்பட்டியலில் சீனா முதல் இடத்திலும் அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது.
    • ஒலிம்பிக் நிறைவு விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ந் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதன் தொடக்க விழா அணிவகுப்பு அங்குள்ள சென் நதியில் அமர்க்களமாக அரங்கேறியது. படகுகள் மூலம் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் அணி வகுத்தனர்.

    உலகின் மிகப்பெரிய இந்த விளையாட்டு திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாலிபால், மல்யுத்தம் உள்பட 9 விளையாட்டுகளில் 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகின்றன.

    போட்டிகள் முடிவடைந்ததும் நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், மீண்டும் வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்திய இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.

    விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலந்து கொண்டு இசை, ஆட்டம், பாட்டம் என்று பார்வையாளர்களை 2 மணி நேரத்துக்கும் மேலாக மகிழ்விக்க இருக்கின்றனர். வில் போன்று உடம்பை வளைத்து செய்யும் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

    முடிவில் அடுத்த (2028) ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) நகர மேயர் கரென் பாஸ்சிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி இறக்கப்பட்டு ஒப்படைக்கப்படும். அப்போது அமெரிக்க நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். அத்துடன் அமெரிக்க நாட்டு குழுவினர் இசை நிகழ்ச்சியும் சில நிமிடங்கள் நடைபெறும். கடைசியாக எறிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்படும். தற்போதைய நிலவரப்படி பதக்கப்பட்டியலில் சீனா 37 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 35 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன. முதலிடத்தை பிடிப்பது யார் என்பதில் இரு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    Next Story
    ×