என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஒலிம்பிக்கில் 8 பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனை 25 வயதிலேயே ஓய்வு
    X

    ஒலிம்பிக்கில் 8 பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனை 25 வயதிலேயே ஓய்வு

    • சிறு வயதில் இருந்தே நீச்சல் என்றால் கொள்ளை பிரியம்.
    • கடந்த 12 மாதங்கள் நீச்சல் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

    ஆஸ்திரேலியாவின் பிரபல நீச்சல் வீராங்கனை அரியானே டிட்மஸ் தனது 25-வது வயதிலேயே நீச்சல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். அரியானே டிட்மஸ் 400 மீட்டர் பிரீஸ்டைலில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் பிரீஸ்டைலில் கடும் போட்டிக்கிடையே அமெரிக்காவின் கேட்டி லெடெக்கி, கனடாவின் சம்மர் மெக்இன்தோஷ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மகுடம் சூடினார்.

    ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளார். அத்துடன் உலக சாம்பியன்ஷிப்பில் 9 பதக்கம் என சர்வதேச போட்டியில் மொத்தம் 33 பதக்கங்களை அறுவடை செய்துள்ளார். 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் அவரது பதக்க வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நீச்சலுக்கு முழுக்கு போட்டு விட்டார்.

    அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'நீச்சல் எனக்கு எப்போதும் பிடிக்கும். சிறு வயதில் இருந்தே நீச்சல் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் இந்த விளையாட்டில் இருந்து ஒதுங்கி, அதை விட வாழ்க்கையில் சில விஷயங்கள் எனக்கு முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளேன். கடந்த 12 மாதங்கள் நீச்சல் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் அது தான் எனது நோக்கமாக இருந்தது. முன்பே இது தெரிந்திருந்தால், எனது கடைசி பந்தயத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக ரசித்து அனுபவித்து இருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    டிட்மசுக்கு 2023-ம் ஆண்டில் கர்ப்பப்பையில் இரண்டு நீர்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனாலும் துரிதமாக நீச்சல் களத்திற்கு திரும்பி ஒலிம்பிக்கில் சாதித்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×