search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வான்கடே சோகத்தை மாற்றுமா?- மும்பை அணியுடன் கொல்கத்தா இன்று பலப்பரீட்சை
    X

    வான்கடே சோகத்தை மாற்றுமா?- மும்பை அணியுடன் கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

    • இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • வான்கடே மைதானத்தை பொறுத்தமட்டில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை அணி பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று தடுமாறுகிறது. அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு கடந்த ஆட்டத்தில் லக்னோவிடம் தோற்றதுடன் மங்கி விட்டது. மும்பை அணி இனிவரும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு தனக்கு சாதகமாக அமைவதுடன், ரன்-ரேட்டிலும் திடமாக இருந்தால் ஒருவேளை அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கலாம். மாறாக இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி முதல் அணியாக வெளியேறும்.

    மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா (343 ரன்), ரோகித் சர்மா (315), இஷான் கிஷன், டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா என்று பெரிய பட்டாளமே வரிசை கட்டி நிற்கிறது. ஆனாலும் ஒரு அணியாக அவர்களது பேட்டிங் திறமைக்கு தகுந்தபடி வெளிப்படவில்லை. பந்து வீச்சில் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு கைகொடுக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் முகமது நபி, பியுஷ் சாவ்லா பந்து வீச்சும் மிரட்டும் வகையில் இல்லை.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை பந்தாடியது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட் (392 ரன்), சுனில் நரின் (372), ஸ்ரேயாஸ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஆல்-ரவுண்டர்கள் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் கணிசமான பங்களிப்பை அளிக்கிறார்கள். மிட்செல் ஸ்டார்க் கட்டுக்கோப்பாக பந்து வீச வேண்டியது முக்கியமானதாகும். நடத்தை விதிமுறையை மீறியதால் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அவரால் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது. இது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.

    அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த கொல்கத்தா அணியும், அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து போகாமல் பார்த்து கொள்ள மும்பை அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    வான்கடே மைதானத்தை பொறுத்தமட்டில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை அணி பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இங்கு 10 ஆட்டங்களில் மும்பையுடன் மோதி இருக்கும் கொல்கத்தா அணி 9-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் மும்பையை வீழ்த்த முடியாமல் தவிக்கும் கொல்கத்தா அணி அந்த நிலையை மாற்றுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை: இஷான் கிஷன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நேஹல் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்டு கோட்ஜீ அல்லது லுக் வுட், பியுஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா.

    கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க் அல்லது துஷமந்தா சமீரா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×