search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை
    X

    ஐதராபாத் கேப்டன் கம்மின்சுடன், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

    • இரு அணியிலும் ‘சரவெடி’ பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது.
    • இவ்விரு அணிகளும் ஒட்டுமொத்தத்தில் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் நடையை கட்டின. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    2 முறை சாம்பியனான (2012, 2014) கொல்கத்தா அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வி, 2 முடிவில்லை என்று 20 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றை எட்டியது. அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து இருப்பது இது 8-வது முறையாகும்.

    கொல்கத்தா அணியின் கடைசி இரு லீக் ஆட்டங்கள் (குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்) மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. அதற்கு முந்தைய 4 ஆட்டங்களில் அந்த அணி வரிசையாக வெற்றி கண்டு இருந்தது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் சுனில் நரின் (1 சதம், 3 அரைசதம் உள்பட 461 ரன்) அதிரடியில் அசத்துகிறார். அவருக்கு பக்கபலமாக இருந்த புயல் வேக ஆட்டக்காரர் பில் சால்ட் (4 அரைசதம் உள்பட 435 ரன்) உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்காக இங்கிலாந்து திரும்பி விட்டார். இது பலத்த பின்னடைவாகும். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கிடம் இருந்து எதிர்பார்த்த வேகம் இன்னும் வெளிப்படவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா வலு சேர்க்கிறார்கள். சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் கலக்குகிறார்கள்.

    முன்னாள் சாம்பியனான (2016) ஐதராபாத் அணி லீக்கில் 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 2-வது இடத்தை தனதாக்கி 7-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் கால் பதித்தது.

    ஐதராபாத் அணி அதிரடியில் பொளந்து கட்டுகிறது. நடப்பு தொடரில் 6 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கும் அந்த அணி பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 215 ரன் இலக்கை 5 பந்துகள் மீதம் வைத்து விரட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களம் இறங்குகிறது.

    அந்த அணியின் பேட்டிங் முதுகெலும்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் (1 சதம், 4 அரைதம் உள்பட 533 ரன்), அபிஷேக் ஷர்மா (3 அரைசதத்துடன் 467 ரன்) விளங்குகிறார்கள். இவர்கள் இருவரும் நிலைத்து விட்டால் எதிரணியின் பாடு திண்டாட்டம் தான். மிடில் வரிசையில் ஹென்ரிச் கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி, ராகுல் திரிபாதி கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் டி.நடராஜன், கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட் சிறந்த நிலையில் உள்ளனர்.

    இந்த சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை சந்தித்து உள்ளன. அந்த ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் வென்று இருக்கும் கொல்கத்தா அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 3-வது முறையாக இறுதிப்போட்டியை எட்ட ஐதராபாத் அணி வரிந்து கட்டும். எனவே இந்த மோதலில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணியிலும் 'சரவெடி' பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் ஒட்டுமொத்தத்தில் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17 முறை கொல்கத்தாவும், 9 தடவை ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

    அகமதாபாத்தில் கடைசியாக நடக்க இருந்த குஜராத்-கொல்கத்தா இடையிலான ஆட்டம் மழை காரணமாக 'டாஸ்' கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. இருப்பினும் இந்த ஆட்டத்துக்கு மழை ஆபத்து இருக்காது என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    போட்டிக்காக இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    கொல்கத்தா: சுனில் நரின், ரமனுல்லா குர்பாஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா அல்லது ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய் அல்லது வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி.

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், சன்விர் சிங், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன் அல்லது விஜயகாந்த் வியாஸ்காந்த்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×