search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு- புதிய தலைவர் அறிவிப்பு
    X

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு- புதிய தலைவர் அறிவிப்பு

    • தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி தேதியை அறிவித்ததில் எந்த விதியையும் மீறவில்லை.
    • தேசிய சாம்பியன்ஷிப்பை இந்த ஆண்டில் நடத்தாவிட்டால், அது வருங்கால இளம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    புதுடெல்லி:

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் வீரர், வீராங்கனைகளின் போராட்டம் எதிரொலியாக பொறுப்பில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த 21-ந்தேதி டெல்லியில் நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் புதிய தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த சம்மேளனத்தில் இருக்கக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கும் வீரர்கள் அவருக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் ஆகியோர் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    சஞ்சய் சிங்குக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் வேறு வழியின்றி புதிய நிர்வாகிகளை கொண்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை இந்த மாத இறுதிக்குள் நடத்தப்போவதாக புதிய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது, விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் விளையாட்டு அமைச்சகம் கூறியது. இதையடுத்து மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையில் 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவர் சஞ்சய் சிங் தனது அதிருப்தியை கொட்டி தீர்த்துள்ளார். சஞ்சய் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜனநாயக முறைப்படி நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச மல்யுத்த சங்கத்தின் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்டு ஓய்வு பெற்ற நீதிபதி தேர்தலை நடத்தினார். 25 மாநில மல்யுத்த சங்கங்களில் 22 மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டு போட்டனர். இதில் தலைவர் பதவிக்கு நின்ற எனக்கு பதிவான 47 ஓட்டுகளில் 40 வாக்குகள் கிடைத்தது. இவை எல்லாம் நடந்த பிறகு நீங்கள் (மத்திய அரசு) எங்களை இடைநீக்கம் செய்வதாக சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்புக்கு தங்களது நிலைப்பாட்டை விளக்க எந்த வித வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இது, இந்திய அரசியலமைப்பின் கீழ் அனைவருக்கும் உரிமை என்ற இயற்கை நீதி, கொள்கைக்கு எதிரானதாகும். இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒரு தன்னாட்சி அமைப்பு. இந்த விஷயத்தில் மத்திய அரசு நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. நாங்கள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர்கள் இடைநீக்கத்தை தளர்த்தாவிட்டால், சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து கோர்ட்டு செல்வோம்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களின் (பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக்) பின்னணியில் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் இன்னும் சில கூட்டம் இருப்பது தெளிவாகிறது. இந்த 3 பேரையும் தவிர்த்து வேறு யாராவது இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக இருக்கிறார்களா என்பதை சொல்லுங்கள் பார்ப்போம். இவர்கள் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் வளர்வதை விரும்பவில்லை. அவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்கிறார்கள்.

    தகுதி போட்டிஇன்றி ஆசிய விளையாட்டு போட்டிக்கு சென்ற பஜ்ரங் பூனியா 0-10 என்ற புள்ளி கணக்கில் மோசமாக தோற்று திரும்பினார். அவர்கள் மல்யுத்தம் விளையாடவில்லை. அரசியல் செய்கிறார்கள். உண்மையிலேயே மல்யுத்தம் மீது அக்கறை இருந்தால் முன்நோக்கி வாருங்கள். உங்களுக்கு உள்ள பாதை சரியாக இருக்கும். அரசியல் செய்ய விரும்பினால், தயவு செய்து அதை வெளிப்படையாக செய்யுங்கள்.

    நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடந்து முடிந்து விட்ட நிலையில் தடையை நீக்கக்கோரி நாங்கள் சர்வதேச மல்யுத்த சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். தற்போது அங்கு (ஐரோப்பா) விடுமுறையாகும். அதனால் அது குறித்து பரிசீலிக்க இன்னும் சில நாட்கள் ஆகக்கூடும்.

    தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி தேதியை அறிவித்ததில் எந்த விதியையும் மீறவில்லை. தேசிய சாம்பியன்ஷிப்பை இந்த ஆண்டில் நடத்தாவிட்டால், அது வருங்கால இளம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தான் இப்போது நிகழ்ந்துள்ளது. ஏனெனில் தாமதம் ஆகும் போது, அவர்களின் வயது அதிகரித்து விட்டால் அதன் பிறகு குறிப்பிட்ட வயது பிரிவு போட்டிகளில் பங்கேற்க முடியாது.

    இவ்வாறு சஞ்சய்சிங் கூறினார்.

    Next Story
    ×